இயக்குநர் பொன் சுகிர், அமெரிக்காவில் திரைப்படம் பற்றி பயின்று, ஆங்கிலத்தில் படம் பண்ணும் ஒரு படைப்பாளி. கர்நாடக சங்கீதம் மீது கொண்ட ஆர்வம் காரணமாக அவர் கீர்தனைகள் எழுதுவதை வழக்கமாக கொண்டவர். இவர் எழுதிய உருப்படிகள் பிரசித்தி பெற்ற பாடகர்களால் மேடைகளில் பாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சராசரி கதைக்களம் சார்பில் பொன் சுகிர் இயக்கி வரும் படம் 'நளினகாந்தி'. இந்த படத்தில் இந்திய தேசிய விருது பெற்ற நடிகர் மற்றும் கவிஞர் வை ஐ ச ஜெயபாலன், கஸ்தூரி, புவிஷா, ஷார்மிலா, ஸலீமா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஜூட் ஆரோகனம் இசையமைத்துள்ளார்.
இந்த படம் குறித்து பேசிய இயக்குநர், ''நளினகாந்தி படம் ஒரு பிரபல வைத்தியர், மனநிலை பாதிக்க படும் வேளையில் அவரை பராமரிக்க வந்த பெண் படும் இன்னல்களையும் அவளுக்கு சமுதாயத்தால் ஏற்படும் தாக்கங்களையும் சித்தரிக்கும் வகையில் உருவாகியுள்ளது.
நளினகாந்தி என்பது ஒரு கர்நாடக ராகத்தின் பெயர். இந்த ராகம் மனநிலை பாதிக்கபட்டவர்களை குணப்படுத்தக்கூடிய சக்தி வாய்ந்தது. இந்தப்படத்தைப்பற்றிய செய்திகள் விரைவில் வரும்''
என்றார்.
இந்த படத்திலிருந்து சமூக அவலங்களை கூறும் 'படித்துமா பகுத்தறிவு இன்றி' என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை ஸ்ரேயா தேவ்நாத் பாடியுள்ளார். இயக்குநர், இந்த பாடலைக்கூட சங்கீத மேடைகளில் பாடவே எழுதியுள்ளார். அதை யாரும் பாட முன் வராத நிலையில், தன் படத்தில் பயன்படுத்த முடிவெடுத்துள்ளார்
மேலும் இந்த பாடல் உருவான விதம் குறித்து பேசிய இயக்குநர் பொன் சுதிர், ''இந்தப்பாடலை நான் இயக்கியுள்ள நளினகாந்தி படத்தில் இடம்பெற வைக்கலாமென முடிவு கொண்டேன். அதற்காக சின்மயியை பாட வைக்கலாமென கூற பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சின்மயிடம் கேட்ட பொழுது அவரும் எந்த பதிலும் தரவில்லை. அதன் பின் அவர் அம்மாவிடம் பேசிய போது அவரோ தன் மகளை தயவு செய்து விட்டு விடுங்கள் என மிகவும் கடுமையாக பேசினார்''என்றார்.
படித்துமா பகுத்தறிவு இன்றி - கஸ்தூரி நடிக்கும் 'நளினகாந்தி' பாடல் வீடியோ