"இந்த ஐபிஎல் மட்டுமே கிரிக்கெட் வாழ்க்கை இல்ல.... ரோஹித்துக்கே அது நல்லா தெரியும்"... 'சூசகமாக சொன்ன கங்குலி?!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுரோஹித் சர்மா காயம் குறித்தும், அவர் இந்திய அணியில் இடம் பெறாதது குறித்தும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பேசியுள்ளார்.
முன்னதாக கடந்த மாதம் 29ஆம் தேதி பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டிக்குப் பின் ரோஹித் சர்மாவுக்கு இடது தொடைப் பகுதியில் தசைநார் கிழிந்து காயம் ஏற்பட்டதால் அவர் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடாமல் இருந்துவந்தார். அப்போது அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மாவின் பெயர் காயம் காரணமாக சேர்க்கப்படவில்லை எனக் கூறப்பட்ட நிலையில், அவர் வலைப்பயிற்சி செய்யும் வீடியோவை மும்பை அணி வெளியிட்டது பெரும் சர்ச்சையையும், சந்தேகத்தையும் கிளப்பியது. இதையடுத்து அவர் வேண்டுமென்றே அணியில் புறக்கணிக்கப்பட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்த சூழலில், ரோஹித் சர்மா அணியில் இடம் பெறாதது குறித்து தற்போது பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பேசியுள்ளார்.
இதுகுறித்து சவுரவ் கங்குலி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், "ரோஹித் சர்மா இந்திய அணியின் சொத்து. அவருக்குச் சாதகமான அனைத்தையும் அணி நிர்வாகம் செய்யும். அது எங்கள் கடமை. ரோஹித் சர்மாவுக்கு ஏற்பட்ட காயம் தீவிரமானது என்பதால்தான் அவரை ஆஸ்திரேலியத் தொடருக்குத் தேர்வு செய்யவில்லை. மற்ற வகையில் அவர் இந்திய அணியின் துணை கேப்டன் என்பதை மறந்துவிடாதீர்கள். ரோஹித் சர்மாவுக்கு ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து ஆய்வு செய்து கண்காணிப்போம். எப்போது குணமடைவார் எனத் தெரியாது.
காயம் ஏற்பட்டதிலிருந்து இதுவரை ரோஹித் சர்மா விளையாடவில்லை. சிறந்த வீரர்களை விளையாட வைப்பது பிசிசிஐயின் கடமை. ரோஹித் குணமடைந்தால் நிச்சயம் அணியில் இடம் பிடிப்பார். எங்களைப் பொறுத்தவரை ரோஹித் சர்மா மீண்டும் காயத்தால் அவதிப்படக்கூடாது. அவருக்கு ஹேம்ஸ்ட்ரிங் தசைநார் கிழிந்துள்ளது. தொடர்ந்து அதுபோல் நடக்கவும் வாய்ப்புள்ளது. இந்தக் காயம் குணமாக நீண்டநாள் கூட தேவைப்படலாம். அதற்காகத்தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் உடற்தகுதி வல்லுநர், இந்திய அணியின் உடற்தகுதி வல்லுநர் இணைந்து பணியாற்றுகிறார்கள்.
ரோஹித் கிரிக்கெட் வாழ்க்கை ஐபிஎல் தொடருடன் முடிந்துவிடாது. நீண்ட காலம் கொண்டது என அவருக்கு நன்கு தெரியும். தற்போது அவர் பேட்டிங் பயிற்சி எடுக்கும் வகையில் வீடியோக்களை வெளியிடுவதைப் பார்த்து அவர் குணமடைந்துவிட்டார் என்று கூறமுடியாது. பயிற்சியில் எந்தவிதமான அழுத்தமும் இல்லாமல் இருப்போம். ஆனால் களத்தில் நெருக்கடியைச் சந்திக்கும்போது நமது தசைகள் வேறுவிதமாக செயல்படும். இதை என் அனுபவத்தால் சொல்கிறேன்.
மேலும் இசாந்த் சர்மா காயத்திலிருந்து குணமடைந்துவிட்டார். அவருக்கான உடற்தகுதி பரிசோதனை, போதுமான பயிற்சி முடிந்தபின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெறுவார். இந்தியாவில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் இங்கிலாந்து தொடர் பற்றி அந்த அணி நிர்வாகம் இதுவரை கவலை ஏதும் தெரிவிக்காததால் தொடர் நடப்பதில் சந்தேகம் இல்லை. அதேபோல அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடத்தவே அதிகமாக முக்கியத்துவம் வழங்கப்படும். அதற்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கிறது என்பதால் பார்க்கலாம்" எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே நேற்றைய ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா விளையாடியுள்ளது மீண்டும் சர்ச்சையை அதிகப்படுத்தியுள்ளது.