"அது இல்ல இங்க பிரச்சனை...வேற ஏதோ தப்பா இருக்கு?!!!... அப்பறம் ரோஹித் ஏன் இத பண்ணனும்???"... 'கேள்விகளை அடுக்கிய சேவாக்!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் ரோஹித் சர்மா இடம்பெறாதது ஏன் என முன்னாள் வீரர் சேவாக் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடப்பு 2020 தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து வெற்றிகளை குவித்தாலும் அந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாக ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ரோஹித் சர்மா நீக்கம் தொடர்பாக கேப்டன் விராட் கோலி மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் ரோஹித் சர்மா இடம்பெறாதது ஏன் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்கும் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள சேவாக், "என்னுடைய காலத்தில் ஒரு வீரருக்கு காயம் என்றால் அவரை மொத்தமாக நீக்க மாட்டார்கள். பெரிய தொடர் நடக்கும் சமயங்களில் அவரை தொடக்கத்தில் சில போட்டிகளில் ஆட விட மாட்டார்கள். காயம் சரியானால் மீண்டும் அணிக்குள் கொண்டு வருவார்கள்.
ஒரு மூத்த வீரரிடம் தேர்வுக்குழு கடுமையாக செயல்படாது. ரோஹித் சர்மாவிற்கு இப்போது இருக்கும் காயத்தை மனதில் வைத்து வாய்ப்பு கொடுக்காமல் இருந்தால் அது தவறு. ஏனென்றால் மொத்தமாக ஆஸ்திரேலிய தொடர் ஒரு மாதம் வரை நடக்கிறது. டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகள் நடக்கிறது. ரோஹித் நினைத்தால் அதற்குள் அணிக்குள் தேர்வாக முடியும். ஆனால் ஏன் அவரை மொத்தமாக நீக்கினார்கள் எனத் தெரியவில்லை.
அதேபோல் ரோஹித்திற்கு ஏற்பட்ட காயம் குறித்த விவரம் தெரியவில்லை. அவர் உடல்நலம் சரியில்லை எனக் கூறப்பட்டது. அப்படி என்றால் அவர் ஏன் மைதானத்திற்கு வருகிறார். அவர் ஓய்வு தானே எடுக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு அவர் ஏன் மைதானத்திற்கு வருகிறார். இதனால் அவர் உண்மையில் உடல்நலம் சரியில்லாமல்தான் இருக்கிறாரா என்றே கேள்வி எழுகிறது. வேறு ஏதோ தான் பிரச்சனையாக இருக்கிறது.
ரோஹித் சர்மாவிற்கு என்ன மாதிரியான காயம் ஏற்பட்டுள்ளது என மும்பை அணி நிர்வாகம்தான் தெரிவிக்க வேண்டும். மும்பை இந்தியன்ஸ் அணி இது தொடர்பாக வீடியோ வெளியிட்டது. இது தொடர்பாக முறையான அறிக்கை வெளியிட வேண்டும். குறைந்தது ரோஹித் சர்மா தனது டிவிட்டரிலாவது விளக்கத்தை போஸ்ட் செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.