'இந்தியாவில் பாதிப்பில்லை எனக் கூறப்பட்டநிலையில்... 'சீரம் நிறுவனம் எடுத்துள்ள திடீர் முடிவு'... 'கோவிஷீல்ட் குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல்!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவிலும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் சோதனையை நிறுத்தி வைப்பதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 1 மற்றும் 2ஆம் கட்ட மனித பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் இறுதிகட்ட மருத்துவ பரிசோதனை இங்கிலாந்தில் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், அங்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒரு நபருக்கு முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதன் காரணமாக இங்கிலாந்தில் இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் பரிசோதனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தை தொடர்ந்து அமெரிக்கா, பிரேசில், தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 3ஆம் கட்ட பரிசோதனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. ஆனால் இந்தியாவில் எந்த பாதிப்பும் இல்லை என்பதால் தடுப்பூசி சோதனை தொடரும் என சீரம் நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது. இதையடுத்து இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிஜிசிஐ) அந்நிறுவனத்திற்கு இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதையடுத்து, இந்தியாவிலும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியான கோவிஷீல்டின் சோதனையை நிறுத்தி வைப்பதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பரிசோதனை வெற்றியடைந்தால் குறைந்த விலையில் இந்த தடுப்பூசி கிடைக்குமென பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.