'எந்த நாடும் தப்பிக்க முடியாது'... 'உலகம் ஆபத்தான காலகட்டத்தில் இருக்கு'... உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
முகப்பு > செய்திகள் > உலகம்டெல்டா வகை கொரோனா தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதால், அது குறித்த விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.
கொரோனாவின் இரண்டாவது அலை உலகையே ஆட்டம் காண வைத்துள்ள நிலையில், 3ம் அலை குறித்த அச்சம் தற்போது எழுந்துள்ளது. அதேநேரத்தில் கொரோனா வைரஸ், தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதால் இதன் தீவிரத்தைக் கணிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. கொரோனா வைரஸ் கிருமியானது, அது கண்டறியப்பட்ட காலத்திலிருந்து தற்போது வரை பல்வேறு நாடுகளில் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா பிளஸ் எனத் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது.
இதில் தற்போது அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது டெல்டா வகை வைரஸ். இந்தியாவில் மிக வேகமாகப் பரவி அதிக பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்திய டெல்டா வைரஸ், உலகம் முழுவதும் ஏராளமான நாடுகளில் பரவியுள்ளது. இந்த டெல்டா வகையைத் தொடர்ந்து தற்போது டெல்டா பிளஸ் வகை கொரோனா பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
இதுகுறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம், ''கொரோனா தொற்றின் டெல்டா மாறுபாடு கிட்டத்தட்ட 100 நாடுகளில் பரவியிருப்பதால், தொற்றுநோயின் மிகவும் ஆபத்தான காலகட்டத்தில் உலகம் உள்ளது. இந்த ஆபத்திற்கு எந்த ஒரு நாடும் விதிவிலக்கு அல்ல. அது குறித்த விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
அதே சமயம் தடுப்பூசிகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை உலக நாடுகளுக்கு இடையே பகிர்ந்து கொள்வதன் மூலம் நாம் இந்த பாதிப்புகளைக் கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ள அவர், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்து நாடுகளிலும் குறைந்தபட்சம் 10 சதவீத மக்களாவது கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உலக நாடுகளின் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும்'' எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.