'சட சடவென பறந்த ட்ரோன்கள்'... 'கண்ணிமைக்கும் நேரத்தில் குண்டு மழை'... 'பழிக்குப்பழி வாங்கிய அமெரிக்கா'... பதற்றத்தில் ஆப்கான்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.கோராசன் பயங்கரவாதிகளைக் குறிவைத்துத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது அமெரிக்கா.

20 ஆண்டுகளுக்குப் பிறகு தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதால் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள தங்கள் நாட்டுக் குடிமக்களை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் விமானம் மீட்டு வருகின்றன. இந்த மீட்புப் பணிகள் காபூல் விமான நிலையத்திலிருந்து நடைபெறுகிறது. இதற்காக, காபூல் விமான நிலையத்தை அமெரிக்கப் படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளன.
இதற்கிடையில், மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் காபூல் விமான நிலையத்தைக் குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தினர். காபூல் விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கோராசன் பிரிவு பயங்கரவாதியால் நடத்தப்பட்ட இந்த தற்கொலைப்படை தாக்குதலில் மக்கள் 60 பேரும், அமெரிக்க ராணுவ வீரர்கள் 12 பேரும் கொல்லப்பட்டனர். காயமடைந்த 143 பேரில் 12 பேர் அமெரிக்க ராணுவ வீரர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தற்கொலைப் படை தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ''காபூல் குண்டுவெடிப்பை மறக்க மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம். பழிக்குப் பழி வாங்குவோம்'' எனக் கடுமையாகத் தெரிவித்திருந்தார். அந்த வகையில் ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.கோராசன் பயங்கரவாதிகளைக் குறிவைத்துத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது அமெரிக்கா.
ட்ரோன் மூலம் பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், காபூல் விமான நிலையத்திலிருந்து அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறும்படி அந்நாடு அறிவுறுத்தியுள்ளது. இதனால் ஆப்கானில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
