அம்மாவுக்கு மருந்து வாங்கணும்.. திடீர்னு சுத்தி வளச்ச ரஷ்ய வீரர்கள்.. பிறந்தநாள் அன்னிக்கு உக்ரைன் பெண்ணிற்கு நேர்ந்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்உக்ரைனை சேர்ந்த 31 வயது பெண் ஒருவர், உடல்நிலை சரியில்லாத தனது அம்மாவிற்கு மருந்து வாங்க சென்றிருந்த நேரத்தில் அவரை ரஷ்ய படை சுட்டு வீழ்த்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மோசமான போர்
உக்ரைன் தனது வரலாற்றின் மிக மோசமான காலத்தினை தற்போது சந்தித்து வருகிறது. ஐரோப்பிய யூனியனோடு இணையும் உக்ரைனின் விருப்பத்திற்கு ரஷ்யா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த வேளையில், கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுப்பதாக அறிவித்தார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.
இதனைத் தொடர்ந்து உக்ரைனில் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் 400 க்கும் அதிகமான உக்ரைனியர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும், 15 லட்சத்திற்கும் அதிகமான உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகிறார்கள்.
அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை
இந்நிலையில், உக்ரைனின் தலைநகரான கீவ் நகரில் வசித்து வந்த வலேரியா மக்செட்ஸ்கா என்ற 31 வயதுப் பெண், உடல்நிலை சரியில்லாமல் இருந்த தனது அம்மாவுக்கு மருந்து வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கிறார். வலேரியா சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க ஏஜென்சியான USAID வில் பணிபுரிந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மருந்துகள் தேவை அதிகரித்ததன் காரணமாக, கீவ் நகரத்தில் இருந்து வெளியேற வலேரியா திட்டமிட்டு இருக்கிறார். இதனால், நகரை விட்டு செல்ல தயாரான வலேரியா தனது தாய் ஐரினா மற்றும் அவரது டிரைவர் யாரோஸ்லோவ் ஆகியோரோடு காரில் புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.
அவர்கள் செல்லும் நேரத்தில் ரஷ்ய படைகள் அந்த வழியாக சென்றிருக்கின்றன. அப்போது வலேரியா சென்ற காரை ரஷ்ய வீரர்கள் சுட்டதில் காரில் இருந்த மூன்று பெரும் உயிரிழந்து இருக்கின்றனர்.
இதனை உறுதிபடுத்தியுள்ள USAID அதிகாரி சமந்தா பவர்," திறமையானவரும் இரக்க குணம் கொண்டவருமான வலேரியா மக்செட்ஸ்கா கொல்லப்பட்ட செய்தியை பகிர்ந்துகொள்வதில் நான் வருத்தப்படுகிறேன்" என தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கீவ் நகரத்தில் சிக்கிக் கொண்ட உக்ரைனியர்களை மீட்க, வலேரியா முயற்சி செய்துவந்ததாக கூறப்படுகிறது. மேலும், தனது 32 வது பிறந்தநாளில் வலேரியா கொல்லப்பட்ட சம்பவம் பலதரப்பு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மற்ற செய்திகள்
