"செர்னோபில் அணு உலை எப்போ வேணும்னாலும் வெடிக்கலாம்".. குண்டை தூக்கிப்போட்ட உக்ரைன்.. பதற்றத்தில் உலக நாடுகள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்செர்னோபில் அணு உலை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என உக்ரைன் நாடு தெரிவித்திருக்கிறது. இதனால் ஐரோப்பிய நாடுகள் அச்சத்தில் உள்ளன.
போர்
ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் தேசம் விருப்பம் தெரிவித்து வந்த நிலையில் இந்த முடிவை ரஷ்யா கடுமையாக எதிர்த்தது. இதன் தொடர்ச்சியாக உக்ரைன் நாட்டில் சிறப்பு ராணுவ ஆப்பரேஷனை நடத்த அனுமதி கோரி ரஷ்ய பாராளுமன்றத்தில் அதிபர் புதின் கோரிக்கையை முன்வைத்தார். இதற்கு பாராளுமன்றமும் அனுமதி கொடுத்தது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுப்பதாக அறிவித்தார் விளாடிமிர் புதின்.
இதனை அடுத்து உக்ரைனில் ரஷ்ய ராணுவத்திற்கும் உக்ரைன் பாதுகாப்பு படைக்கும் இடையே கடுமையான போர் நடந்து வருகிறது. இதன்காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் பலர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது. மேலும் இந்த போர் காரணமாக இதுவரையில் 30 லட்சம் மக்கள் அண்டை தேசங்களில் தஞ்சமடைந்துள்ளதாக உக்ரைன் கூறிவருகிறது.
செர்னோபில்
வடக்கு உக்ரைனில் அமைந்துள்ளது செர்னோபில் அணு உலை. சோவியத் யூனியனில் உக்ரைன் இருந்த போது இந்த பகுதியில் அணு உலை கட்டப்பட்டது. இதனை அடுத்து, 1986 ஏப்ரல் 26-ம் தேதி நிகழ்ந்த விபத்தால் இரண்டு முறை அணு உலைகள் வெடித்தன. மனித குலம் சந்தித்த மிகப்பெரிய அணு விபத்து இதுதான். தற்போது இந்த உலை செயல்படவில்லை என்றாலும் இதனுள் அணு எரிபொருட்கள் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
படை குவிப்பு
இந்நிலையில், செர்னோபில் அணு உலைக்கு அருகே ரஷ்ய படைகள் ஆயுதங்களை பதுக்கி வருவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், அணு உலைக்கு அருகே ஏதேனும் விபத்து நேர்ந்தால் மொத்த ஐரோப்பாவும் மிகப்பெரிய அழிவை சந்திக்க வேண்டியிருக்கும் எனவும் உக்ரைன் அரசு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரெஷ்சுக் (Irina Verschuk) வெளியிட்டுள்ள அறிக்கையில்,"செர்னோபில் அணு உலைக்கு மிக அருகில் ரஷ்யா ஆயுதங்களை வைத்திருக்கிறது. ஒருவேளை, போரின் போது அந்த ஆயுதங்கள் வெடிக்க நேரிட்டால், அணு உலையில் மிகப்பெரிய வெடி விபத்து ஏற்படும். அணு உலை செயல்படாவிட்டாலும் அதற்குள் ஏராளமான வேதிப்பொருட்கள் இருப்பதால், சிறு அலட்சியம் கூட மிகப்பெரிய பேரழிவுக்கு வழிவகுத்துவிடும். எனவே அந்த நகரில் இருந்து ரஷ்ய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஐக்கிய நாடுகள் அவை இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். செர்னோபில் அணு உலை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என உக்ரைன் தெரிவித்திருப்பது மொத்த ஐரோப்பாவையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.