'திக் திக்கென இருந்த இந்தியர்கள்'... 'அடிச்சாரு பாருயா முதல் பால்யே சிக்ஸர்'... செம குஷியில் 'இந்திய சாப்ட்வேர் பொறியாளர்கள்'!
முகப்பு > செய்திகள் > உலகம்எச்1பி விசா விவகாரத்தில் இந்தியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பெரும் மகிழ்ச்சி செய்தி தேடி வந்துள்ளது.
அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமை பெறாமல் அங்குத் தங்கி பணியாற்ற வெளிநாட்டினருக்கு எச்1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசா மூலம் இந்தியா, மற்றும் சீன நாட்டினர் அதிகப் பயனடைந்து வருகின்றனர். இந்தச்சூழ்நிலையில் கொரோனாவின் தாக்கம் உலகளவில் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. அது அமெரிக்காவையும் விட்டு வைக்கவில்லை.
கொரோனாவால் அமெரிக்கா பாதிக்கப்பட்ட போது ஏராளமான அமெரிக்கர்கள் வேலை இழந்தனர். இதை வைத்து விசா தடைக்காக எப்போதும் பேசி வந்த அப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப், கொரோனா கால முடக்கம், மற்றும் வேலையின்மையைக் காரணம் காட்டி எச்1பி விசா வழங்கலுக்குத் தடை விதித்தார்.
விசா தடை குறித்துப் பேசி வந்த டிரம்ப் கொரோனவை காரணம் காட்டி, டிசம்பரில் விசா குறித்த உத்தரவு காலாவதியான பின்னரும் அதை நீட்டித்து அவர் உத்தரவு பிறப்பித்தார். இந்த சூழ்நிலையில் கடந்த ஜனவரியில் நாட்டின் புதிய அதிபராகப் பொறுப்பேற்ற ஜோ பைடன் முன்னாள் அதிபர் டிரம்பின் குடியுரிமை மற்றும் குடிவரவு கொள்கைகள் மோசமாக இருப்பதாகவும் அவை திரும்பப் பெறப்படும் என்றும் உறுதியளித்தார்.
இதற்கிடையே நேற்று முன்தினத்துடன் எச் - 1பி விசாவுக்கு இருந்த தடை முடிவுக்கு வந்தது. அந்த தடையை மேலும் நீட்டிக்க விரும்பாத அதிபர் பைடன் அந்த உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக அறிவித்தார். இனி வெளிநாட்டுத் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு எச் - 1பி விசாக்கள் வழங்கப்படும். தடை நீக்கப்பட்டுள்ளதால் இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
அதே போல் அமெரிக்கக் குடியுரிமைக்கான கிரீன் கார்டு புதிதாக அளிக்கவும் டிரம்ப் நிர்வாகம் இட்டிருந்த உத்தரவை பைடன் முன்னதாக நீக்கினார். டிரம்பின் இந்த அவசர அடி முடிவுகள் அமெரிக்காவுக்கு நன்மை செய்வதை விடப் பாதிப்பையே ஏற்படுத்தியது அமெரிக்கர்களே தங்கள் குடும்பத்தினருடன் ஒன்று சேர முடியாமல் போனது என்று அதிபராவதற்கு முன்னையே பைடன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.