'பசுபதி அப்படி என்னடா தப்பு செஞ்சு போட்ட'... '1,446 வருஷம் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்'... பரபரப்பு தீர்ப்பின் பின்னணி!
முகப்பு > செய்திகள் > உலகம்தற்போது எங்குத் திரும்பினாலும் கொரோனா குறித்த செய்திகள் தான் அலை மோதுகிறது என்றால், இது போன்ற சில விசித்திரமான செய்திகள் நம்மை ஆச்சரியப்படச் செய்கிறது. மோசடியில் ஈடுபட்ட 2 பேருக்கு தலா 1,446 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து பாங்காக் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது தான், அந்த பரபரப்புக்குக் காரணம்.
தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் லாம்கேட் என்ற கடல் உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் கடல் சார்ந்த உணவுகள் மிகவும் பிரபலம். பல வித்தியாசமான கடல் உணவுகள் இங்கு கிடைத்ததால் மக்கள் பலரும் விரும்பி வந்து சாப்பிட்டுச் சென்றார்கள். இதனால் உணவகத்திற்கு வருமானம் அதிகரித்த நிலையில், வியாபாரத்தை மேலும் வளர்ச்சி அடையச்செய்வதற்காக ஒரு உத்தியை அதிரடியாக உணவக உரிமையாளர்கள் வகுத்தனர்.
அதன்படி 10 பேருக்குக் கடல் உணவு வழங்குவதற்கு 28 டாலர் (சுமார் ரூ.2,100) தொகையை முன்கூட்டியே செலுத்தி வவுச்சர் பெற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு வரிசைப்படி உணவு வழங்கப்படும். இதில் சிறப்பு என்னவென்றால் வழக்கமான தொகையை விட இதில் விலை குறைவு. இதனால் வாடிக்கையாளர்களிடம் இதற்கு ஆதரவு பெருகியது. பலரும் போட்டிப் போட்டுக்கொண்டு தொகையைச் செலுத்திப் பதிவு செய்து வவுச்சர்களை வாங்கினார்கள்.
இதன் மூலம் அந்த உணவகத்திற்கு 1.6 மில்லியன் டாலர் (சுமார் ரூ.12 கோடி) பணம் வந்து குவிந்தது. ஆரம்பத்தில் வவுச்சர் பெற்றிருந்தவர்கள், உணவகத்துக்கு வந்து அந்த சலுகைத்திட்டத்தின்கீழ் உணவைப் பெற்றுச் சாப்பிட்டு ருசிக்க முடிந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல பதிவு செய்தவர்களுக்குக் கடல் உணவு பரிமாறப் பல மாதங்கள் ஆகும் என உணவகம் தெரிவித்தது. இந்தச்சூழ்நிலையில் வாடிக்கையாளர்கள் அத்தனை பேரின் தேவையைச் சந்திக்கிற அளவுக்குச் சமைத்துப் பரிமாற ஏற்ற அளவுக்குக் கடல் வாழ் உயிரினங்கள் கிடைப்பதில்லை எனக் கூறி, கடந்த மார்ச் மாதம் திடீரென உணவகத்தை மூடி விட்டார்கள்.
இது பணம் செலுத்தி வவுச்சர் பெற்றிருந்த வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து வவுச்சர் பெற்றவர்களுக்கு, தொகை திரும்பத்தரப்படும் என உணவக உரிமையாளர்கள் அறிவித்த நிலையில், ஆத்திரத்திலிருந்த 818 வாடிக்கையாளர்கள் உணவகத்தின் மீது புகார் அளித்தார்கள். இதையடுத்து அந்த உணவகத்தின் உரிமையாளர்களான அப்பிசார்ட் போவர்ன்பஞ்சரக்கையும், பிரபாசோர்ன் போவர்ன்பஞ்சாவும் கைது செய்யப்பட்டனர்.
இருவர் மீதும் பாங்காக் கோர்ட்டில் போலீசார் மோசடி வழக்கு தொடர்ந்த நிலையில், 2 பேரும் தங்கள் மீதான மோசடி குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் குற்றவாளிகள் என கோர்ட்டு முடிவு செய்தது. இதையடுத்து 2 பேருக்கும் தலா 1,446 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நேற்று முன்தினம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் தண்டனை காலம் 723 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. இருப்பினும் அந்த நாட்டு சட்டப்படி உண்மையிலேயே தலா 20 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்தால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.