"உயிரோட இருக்கணும்னா.. இதை செய்யுங்க" ரஷ்ய வீரர்களுக்கு உக்ரைன் அதிபர் சொன்ன அட்வைஸ்..!
முகப்பு > செய்திகள் > உலகம்உக்ரைன் தனது வரலாற்றில் இதுவரை காணாத கருப்பு தினமாக அமைந்தது கடந்த வியாழக் கிழமை. ரஷ்யாவிற்கு வெளியே ராணுவ தாக்குதலை நடத்த ரஷ்ய பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற்ற நிலையில், உக்ரைன் மீது போர் தொடுப்பதாக அறிவித்தார் விளாடிமிர் புதின். இதனை அடுத்து சுமார் ஒன்றரை லட்சம் ரஷ்ய வீரர்கள் உக்ரைன் எல்லைக்குள் பிரவேசித்தனர்.
விமான நிலையங்கள் துவங்கி உக்ரைனின் அனைத்து உட்கட்டமைப்புகளையும் உருக்குலைக்கும் நோக்கில் ரஷ்ய வீரர்கள் களமாடி வருகின்றனர். இந்நிலையில், பெலாரசில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா உக்ரேனை அழைத்து. முதலில் இதனை உக்ரைன் மறுத்த நிலையில் தற்போது பெலாரசில் வைத்து இருநாட்டு உயர் அதிகாரிகளும் போர் நிறுத்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அணு ஆயுதம்
நாட்டில் உள்ள அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருக்கும்படி புதின் நேற்று உத்தரவிட்டிருந்தார். இது மேற்குலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியது. உக்ரைன் மீது போர் தொடுத்ததன் காரணமாக அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய முன்னணி நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இந்நிலையில் போரை முடிவிற்கு கொண்டுவர விரும்புவதாக ரஷ்யா தெரிவித்திருந்தது.
உயிரை காப்பாத்திக்கணும்னா..
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி," ரஷ்ய வீரர்கள் உயிரை காப்பாற்றிக்கொண்டு வெளியேறவும். மேலும், அவசரகால விதிகளை பயன்படுத்தி ஐரோப்பிய யூனியன் எங்களை இணைத்துக்கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
மேலும், பல இடங்களில் ரஷ்ய படைகள் முன்னேற முடியாத அளவிற்கு போர் புரிந்து வருவதாகவும் இருப்பினும் சில இடங்களில் ரஷ்ய ராணுவத்தின் கை ஓங்கி உள்ளதாகவும் உக்ரேனிய அரசு தெரிவித்துள்ளது.
மக்கள் மீது தாக்கவில்லை
உக்ரேன் ராணுவ தளவாடங்கள், துருப்புகள் மீதே தாக்குதல் நடத்துவதாகவும் பொது இடங்களிலோ மக்கள் மீதோ தாக்குதல் நடத்தவில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது. இருப்பினும் ரஷ்யாவின் தாக்குதலினால் 198 பேர் உயிரிழந்திருப்பதாக நேற்று உக்ரைன் தெரிவித்திருந்தது.
இருநாடுகளுக்கு இடையேயான போர் காரணமாக உலக அளவில் பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. கச்சா எண்ணெய் விலை உயர்வை சந்தித்து வருகிறது. அதேபோல, தங்கம் உள்ளிட்ட பொருள்களும் விலை அதிகரித்துவருகின்றன.