இங்கிலாந்து ராணியின் மகுடத்தில் இருக்கும் 500 கேரட் வைரம்.. திரும்ப கேட்கும் நாடு.. முழு விபரம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்-ன் நகைகளில் உள்ள வைரத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென தென் ஆப்பிரிக்க மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ராணி
பிரிட்டனில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் 1952-ம் ஆண்டு மரணம் அடைந்தபோது ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இரண்டாம் எலிசபெத். அப்போது அவருக்கு வயது 25. பிரிட்டன் வரலாற்றில் நீண்டகாலம் ராணியாக இருந்த பெருமை இரண்டாம் எலிசபெத்திற்கு உண்டு. அவருடைய ஆட்சிக்காலத்தில் 15 பிரதமர்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்திருக்கிறார். நெடுநாள் ராணியாக பதிவி வகித்த அவர் கடந்த 8 ஆம் தேதி தன்னுடைய 96 வயதில் காலமானார். இந்நிலையில், இன்று அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இந்நிலையில், ராணியின் மகுடம் மற்றும் செங்கோலில் இருக்கும் வைரம் தங்களுக்கு திருப்பி கொடுக்கப்படவேண்டும் என தென் ஆப்பிரிக்க தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளது உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
வைரம்
கடந்த 1905 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் வெட்டியெடுக்கப்பட்ட மிகப்பெரிய வைரம் 9 பெரிய கற்களாகவும் 96 சிறிய கற்களாகவும் வெட்டப்பட்டு பட்டை தீட்டப்பட்டது. இதில் மிகப்பெரிய வைரக்கல் Great Star of Africa அல்லது Cullinan I என்று அழைக்கப்படுகிறது. இரண்டாவது பெரிய கல் Smaller Star of Africa என்று அழைக்கப்படுகிறது. சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்ட வைரக்கல் மொத்தம் 3,106 கேரட் எடை கொண்டதாக இருந்திருக்கிறது.
இங்கிலாந்தின் அப்போதைய மன்னர் இரண்டாம் எட்வர்ட்-க்கு பிறந்தநாள் பரிசாக இந்த வைரம் 1907 ஆம் ஆண்டு அளிக்கப்பட்டிருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் அப்போது பிரிட்டிஷ் ஆட்சி இருந்ததால் உள்ளூர் தலைவர்கள் இந்த வைரத்தை அரசருக்கு பரிசாக அளித்ததாக சொல்லப்படுகிறது. அடுத்த ஆண்டு அதாவது 1908 ஆம் ஆண்டு இந்த வைரம் பல பகுதிகளாக வெட்டப்பட்டு, அரசியின் மகுடம் மற்றும் செங்கோலில் பதிக்கப்பட்டது. இதில் மிகப்பெரிய பகுதியான Great Star of Africa வின் எடை 500 கேரட் ஆகும். இதனுடைய மதிப்பு என்ன என்பது கணிக்கமுடியாதது என்கிறார்கள் நிபுணர்கள்.
இழப்பீடு
இந்நிலையில், தங்களது நாட்டில் இருந்து வெட்டியெடுக்கப்பட்டு இங்கிலாந்து அரசருக்கு கொடுக்கப்பட்ட Great Star of Africa வைரம் மீண்டும் தங்களிடம் அளிக்கப்படவேண்டும் என தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் சமூக வலை தளங்களில் கோரிக்கை வைத்துவருகின்றனர். தென்னாப்பிரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான Vuyolwethu Zungula தனது ட்விட்டர் பக்கத்தில்,"தென் ஆப்பிரிக்காவில் இருந்து திருடப்பட்ட வைரம் மற்றும் தங்கத்தை பிரிட்டன் திரும்பிக்கொடுக்க வேண்டும். அதுவே பிரிட்டன் செய்த தீங்குகளுக்கு இழப்பீடாக அமையும்" என குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.