அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ‘20 பேர் பலி, 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம்’.. பாகிஸ்தானில் நடந்த பயங்கரம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் (Pakistan) நாட்டின் பலுசிஸ்தான் (Balochistan) மாகாணத்தில் உள்ள ஹார்னாய் (Harnai) பகுதியில் இன்று (07.10.2021) அதிகாலை 3.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டுள்ளது. இதனால் பல கட்டிடங்கள் உடைந்து விழுந்துள்ளன. இந்த இடிபாடுகளில் சிக்கி இதுவரை 20 உயிரிழந்துள்ளதாகவும், 200-க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6-ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகாலை வேளையில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் தூக்கத்திலே பலர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது மக்கள் அனைவரும் சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனிடையே இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. கடந்த 2013-ம் ஆண்டு இதே பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.