'நாங்க கடவுளா வணங்குற 'கிம்'-ஐ... BLOODY PIG என்று சொன்னார்கள்!'.. கொந்தளித்த வட கொரியா!.. வெறும் சிகரெட் துண்டுகளால் 'செம்ம' பதிலடி!
முகப்பு > செய்திகள் > உலகம்தென் கொரியாவுக்கு எதிராக உளவியல் போர் தொடுக்கும் விதமாகவும், பழிவாங்கும் விதமாகவும் 1.2 கோடிக்கும் அதிகமான துண்டுப் பிரசுரங்களைப் பறக்கவிடும் நூதன போர் முறையை மீண்டும் வடகொரியா கையிலெடுக்கத் தொடங்கியுள்ளது.

வடகொரியாவில் உள்ள பிரிண்டிங் பிரஸ்சுகள் அனைத்தும் இப்போது நோட்டீஸ் அச்சடிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருப்பதாக வடகொரிய ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது. கடந்த வாரத்தில், வடகொரியாவிலிருந்து தென்கொரியாவுக்குத் தப்பிச் சென்றவர்கள், வட கொரியாவுக்கு எதிராகத் துண்டுப் பிரசுரங்கள் மற்றும் பலூன்களைப் பறக்கவிட்டனர். இந்தச் செயலுக்குப் பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக வடகொரியா தனது எதிர் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
'கொரிய நாடுகளுக்கு இடைப்பட்ட ஒப்பந்தத்தத்தை மீறி, பிரச்சாரங்களில் தேசத்துரோகிகள் ஈடுபடுகிறார்கள். அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக தென்கொரியா மற்றும் அதன் தலைநகர் சியோலுக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள், சிகரெட் துண்டுகள் மற்றும் குப்பைகள் அடங்கிய 3000 த்திற்கும் மேற்பட்ட ராட்சச பலூன்களை எல்லைகள் கடந்து தென்கொரியா மீது அனுப்பப்போகிறோம் என்று வடகொரியா தெரிவித்துள்ளது.
தென்கொரியாவிலிருந்து சமீபத்தில் வட கொரியாவுக்கு அனுப்பப்பட்ட பலூன்களில் பில்கள், டிரான்சிஸ்டர் ரேடியோ, வீணாய்போன கணினி டிரைவ்கள் மற்றும் வடகொரியா அதிபரை குறிப்பிட்டு 'ரத்தக்களரி பன்றி' (Bloody pig) என்று எழுதப்பட்ட துண்டுப் பிரசுரங்களையும் அனுப்பி வைத்தனர். இந்த செயல்கள் வடகொரியா அதிபரை கோபமடையச் செய்திருக்கின்றன.
தென் கொரியாவிலிருந்து வட கொரியாவுக்கு எதிராகக் குப்பைகள் நிறைந்த பலூன்களை அனுப்புவோரைக் காவல் துறையினர் தடுத்து வருவதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. இருந்தாலும் வட கொரியாவுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களைப் பார்த்த வடகொரியா, "வடகொரியாவுக்கு எதிரான சகித்துக்கொள்ள முடியாத அவமானம் இது. வானத்திலிருந்து லட்சக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள் தலைக்கு மேலே விழுவதைப் பார்க்கும்வரை தென்கொரியர்கள் திருந்தமாட்டார்கள். அந்தக் குப்பைகளை அள்ளும்போதுதான் இது எவ்வளவு கோபத்தையும், எரிச்சலையும் ஏற்படுத்தும் என்பதை உணர்வார்கள்" என்று காட்டமாகத் தெரிவித்திருக்கிறது.
இந்த பலூன்கள் எப்போது பறக்கவிடப்படும் என்பதை வடகொரியா இதுவரை தெரிவிக்கவில்லை. இந்தத் துண்டுப் பிரசுரங்கள் எங்கள் கோபத்தையும் வெறுப்பையும் நிச்சயம் வெளிப்படுத்தும் என்றும் வடகொரியா தெரிவித்திருக்கிறது. இதற்கு முன் 2016-ல் வடகொரியா இதே மாதிரியான துண்டுப் பிரசுரங்களை எல்லைகள் கடந்து அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
