'இதெல்லாம் முடியறதுக்குள்ள ஏராளமான உயிரிழப்பு இருக்கு'... 'ஆனா கொரோனாவால இல்லை'... 'பில்கேட்ஸ் எச்சரிக்கை!'...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா பாதிப்பு முடிவுக்கு வருவதற்குள் இன்னும் ஏராளமானோர் உயிரிழப்பார்கள் எனவும், ஆனால் உயிரிழப்புகளுக்கு கொரோனா காரணமாக இருக்காதெனவும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார்.

உலகையே உலுக்கி வரும் கொரோனா பாதிப்பு குறித்து பேசியுள்ள மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், "கொரோனா தடுப்பூசி வரும் 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் நியாயமான விலையில் மிகப்பெரிய அளவில் உற்பத்தியில் இருக்கும். உலக மக்கள் தொகையில் பெரும்பான்மையினருக்கு நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக, கொரோனா தொற்றின் பரவல் குறையும். கொரோனா பாதிப்பு முடிவுக்கு வருவதற்குள் இன்னும் ஏராளமானோர் உயிரிழப்பார்கள். ஆனால் 90 சதவீதத்திற்கும் அதிகமான உயிரிழப்புகள் கொரோனாவுடன் தொடர்பில்லாதவையாக இருக்கும்.
ஊரடங்கு நடவடிக்கையால் பிற நோய்களுக்கான மருத்துவ வசதி கிடைப்பதை தடைப்பட்டுள்ளதால், அதன் விளைவாக மலேரியா மற்றும் எச்.ஐ.வி. நோயால் உயிரிழப்பு அதிகரிக்கும். கொரோனா பாதிப்பு தொடர்பான நடவடிக்கைக்கு பில்கேட்ஸ் அறக்கட்டளை 350 மில்லியனுக்கும் அதிகமான நிதியை அளித்துள்ளது. ஆனால் அது போதாது. இன்னும் அதிகமாக தேவைப்படுகிறது. டிரில்லியன் கணக்கான செலவுகளை ஏற்படுத்தும் பொருளாதார சேதத்தை தடுக்க கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் பல பில்லியன் டாலர்கள் செலவிடப்பட வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை, பல பின்தங்கிய நாடுகளில் சேத விவரங்களை துல்லியமாக கணக்கிடுவது மிகவும் கடினம். ஆப்பிரிக்காவில் ஆகஸ்ட் 17ஆம் தேதிக்குள் 25,000க்கும் மேற்பட்ட கொரோனா உயிரிழப்புகளும், இந்தியாவில் கிட்டத்தட்ட 52,000 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. சமீபத்திய ஆராய்ச்சியில், தற்போதுள்ள கொரோனா வைரஸ்கள் புதிய கொரோனாவுக்கு எதிராக குறிப்பிட்ட அளவிலான பாதுகாப்பை வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. உலக மக்கள்தொகையில் சுமார் 30 முதல் 60 சதவீதத்தினருக்கு கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பூசி போட வேண்டும். அதிர்ஷ்டவசமாக இது அம்மை நோய் அல்ல என்பதால், 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடத் தேவையில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
