"கைலாசாவுக்கு வர விருப்பமா?.. நீங்க செய்ய வேண்டியது 'இது' தான்!".. நித்யானந்தா அதிரடி OFFER!
முகப்பு > செய்திகள் > உலகம்கைலாசா நாட்டிற்கு வர விரும்புவோரை ஆஸ்திரேலியாலில் இருந்து இலவசமாக விமானத்தில் அழைத்துச் செல்ல உள்ளதாக சாமியார் நித்யானந்தா பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தலைமறைவாக உள்ள சாமியார் நித்யானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கியிருப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதுதொடர்பான தகவல்களை அவ்வப்போது வீடியோ மூலம் வெளியிட்டு வருகிறார். கைலாசா தொடர்பான பல்வேறு வதந்திகளும் பரவத் தொடங்கின.
கைலாசாவுக்கென தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள், புதிய தங்க நாணயம் என அதிரடி அறிவிப்பை நித்யானந்தா வெளியிட்டார். விரைவில் கைலாசா நாட்டிற்கான பாஸ்போர்ட் குறித்த அறிவிப்பையும் வெளியிட உள்ளதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், கைலாசா பயணம் தொடர்பாக நித்யானந்தா பேசுவது போன்ற ஒரு புதிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், கைலாசா நாட்டிற்கு வருபவர்களை இலவசமாக அழைத்துச் செல்ல உள்ளதாகவும், இதற்காக 3 நாட்கள் கொண்ட இலவச விசாவிற்கு விண்ணப்பித்து, ஆஸ்திரேலியாவிற்கு வரவேண்டும் என்றும் கூறி உள்ளார்.
அந்த வீடியோவில் நித்யானந்தா மேலும் கூறியதாவது:-
கைலாசாவுக்கு வருகை தர விரும்புவோர் கைலாசாவின் மின்னஞ்சலில் விண்ணப்பம் செய்யலாம். கைலாசாவுக்கு சென்று வர எந்தவித கட்டணமும் இன்றி 3 நாள் விசா இலவசமாக வழங்கப்படும். மூன்று நாட்களுக்குமேல் விசா கிடையாது. ஆஸ்திரேலியா வரை வந்துவிட்டால் அங்கிருந்து கைலாசாவுக்கு இலவசமாக விமானத்தில் அழைத்துச் செல்லப்படுவர்.
ஆஸ்திரேலியாவில் இருந்து மட்டுமே இந்த சேவை என்பதால் வருகின்ற நபர்கள் ஆஸ்திரேலியா வரை தங்களது சொந்த செலவில் வருகை தர வேண்டும். ஆஸ்திரேலியாவிலிருந்து கருடா என பெயரிடப்பட்டுள்ள கைலாசாவின் சிறிய விமானங்கள் மூலமாக கைலாசாவுக்கு எந்தவிதக் கட்டணமும் இன்றி அழைத்து வரப்படுவர்.
அதேபோன்று மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பும் வரை உணவு, தங்குமிடம் போன்ற வசதிகளும் போக்குவரத்து வசதிகளும் கைலாசா நிர்வாகத்தின் சார்பாக செய்து தரப்படும். கைலாசா வருகை தர விரும்பும் நபர்கள் தங்களின் முழு விவரங்களோடு கைலாசாவின் மின்னஞ்சலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
ஒருவர் மூன்று நாட்களுக்கு மேல் கைலாசாவில் தங்க முடியாது. இந்த மூன்று நாட்களில், ஒவ்வொரு நாளும் என்னுடன் சேர்ந்து இறைவனை வழிபட வாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாறு நித்யானந்தா கூறுகிறார்.

மற்ற செய்திகள்
