டிரம்ப்புக்கு 'செக்: ”நான் அதிபரானால், H-1B விசா தடையை நீக்குவேன்” - ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ‘ஜோ பிடன்’ அதிரடி!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா தொற்று மூலம் மற்ற நாடுகளை விட அமெரிக்கா கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. சுமார் 27 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று மூலம் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல கோடி அமெரிக்கர்கள் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர்.
இதனால், மற்ற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் பணிபுரிபவர்களுக்கு வழங்கப்படும் H - 1B விசாவை இந்தாண்டு இறுதி வரை தடை செய்யுமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். இதன் மூலம் அமெரிக்கர்கள் பலர் வேலையில்லாமல் திண்டாடும் வாய்ப்பு குறைந்து விடும் என்பதால் டிரம்ப் இந்த முடிவை எடுத்திருந்தார். ஆண்டு தோறும் லட்சக்கணக்கான ஐடி ஊழியர்கள் அமெரிக்காவில் சென்று பணிபுரிந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அதிகம் பேர் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இருந்து பணிபுரிந்து வரும் நிலையில், ஹெச்1பி விசா தடை இந்தியர்கள் பலருக்கு பெரும் வேதனையாக அமைந்துள்ளது.
இந்நிலையில், நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் அமெரிக்காவில் நடைபெறும் நிலையில், டிரம்ப்புக்கு எதிராக போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் அதிரடி பேட்டியளித்துள்ளார். அப்போது 'நான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் முதல் வேலையாக ஹெச்1பி விசா மீதான இடைகாலத் தடையை நீக்குவேன்' என உறுதியளித்துள்ளார்.
மேலும், 'அமெரிக்காவுக்குள் குறிப்பிட்ட முஸ்லிம் நாடுகளின் மக்கள் வந்து செல்வதற்கான தடையை முற்றிலும் நீக்குவேன். ஹெச்1பி விசா மூலம் அமெரிக்காவில் வசித்து பணிபுரிந்து வருபவர்கள் அமெரிக்காவை உயர்த்தியதில் மிகப்பெரிய பங்குண்டு. ஹெச்1பி விசா சீரமைப்பு மசோதாவை உடனடியாக செனட்டுக்கு அனுப்பி வைத்து அதற்குரியை தடையை நீக்குவேன். அதிபர் டிரம்ப்பின் குடியேற்றக் கொள்கைகள் மனிதாபிமானமற்றவை' என்றார்.
'என்னுடைய குடியேற்றக் கொள்கையில் அதிக திறமை உள்ளவர்களுக்கு மட்டும் ஆதரவாக இல்லாமல், குறைந்த ஊதியம் பெறுபவர்கள், குறைந்த திறமை உள்ளவர்களுக்கும் ஆதரவை வழங்குவேன். இதன் மூலம் அமெரிக்காவில் போட்டி அதிகரிக்க வகை செய்யப்படும். அதே போல, தற்போது ஆண்டுக்கு சுமார் 1.40 லட்சம் பேருக்கு க்ரீன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. அந்த எண்ணிக்கையையும் உயர்த்துவேன்' என தெரிவித்துள்ளார்.