'அமெரிக்கா என்ன எங்கள வேண்டாம்னு சொல்றது!? நாங்க வேற ப்ளான் பண்ணிட்டோம்!'.. இந்தியர்களின் அடுத்த 'வேலைவாய்ப்பு ஹாட்ஸ்பாட்' இது தான்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅமெரிக்கா விசா பிரச்னையால் இந்தியர்கள் பலர் கனடாவை நோக்கி நகர உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளிநாட்டவர்களுக்குக் கொடுக்கப்படும் வேலைவாய்ப்பைக் குறைக்க வேண்டும் எனத் திட்டமிட்டு விசா கட்டுப்பாடுகளை விதிக்கத் துவங்கியபோதே, கனடா பாஸ்ட் டிராக் விசா திட்டத்தை 2017இல் அறிமுகம் செய்தது. இது அமெரிக்காவில் விசா காலம் முடிந்து வெளியேறும் வெளிநாட்டவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது என்றால் மிகையில்லை.
இந்நிலையில், இந்தப் பாஸ்ட் டிராக் திட்டத்தை இந்தியர்கள் மிகப்பெரிய அளவில் பயன்படுத்வது கனடா அரசுக்கே ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளனர்.
கனடாவின் இந்த Global Skills Strategy பாஸ்ட் டிராக் திட்டத்தில், கடந்த 3 வருடத்தில் வந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், அதிலும் டாப் 5 டெக் வேலைகளுக்கு மட்டும் சுமார் 23,000 பேர் விசா பெற்றுள்ளதாக IRCC அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், 2020 ஜனவரி முதல் மார்ச் காலகட்டத்தில் மட்டும் சுமார் 2300 பேர் இந்த டாப் 5 டெக் வேலைகளுக்கு விசா பெற்றுள்ளதாக Immigration, Refugees and Citizenship Canada (IRCC) அமைப்பு தெரிவித்துள்ளது.
கனடா மார்ச் மாதத்திற்குப் பின் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த காரணத்தால் விசா பணிகள் முடங்கியது. அதுமட்டும் அல்லாமல் உலக நாடுகளின் வான் மற்றும் தரை வழி எல்லைகள் கொரோனா பரவுவதைத் தடுக்க மூடப்பட்ட நிலையில், விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் சற்றுக் குறைந்துள்ளதாக IRCC அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தப் பாஸ்ட் டிராக் திட்டத்தில் வெறும் 2 வாரக் காலத்தில் விசா விண்ணப்பம் ஆய்வு செய்யப்பட்டு விசா கொடுக்கப்படுகிறது.
கடந்த 3 வருடத்தில் இந்தப் பாஸ்ட் டிராக் திட்டத்தில் விசா பெற்றவர்களில் 62.1 சதவீதம் இந்தியர்கள் தான். இது மிகப்பெரிய அளவீடு என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியர்களைத் தொடர்ந்து சீனர்கள் அடுத்த 2வது இடத்தைப் பிடித்துள்ளனர். இதேபோல் அமெரிக்கர்களும் இந்த 3 வருடத்தில் 1000 பேர் கனடா விசாவிற்காக விண்ணப்பம் செய்துள்ளதாக IRCC அமைப்பு தெரிவித்துள்ளது.
சமீபத்தில், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களாகக் கருதப்படும் அமேசான், ஆல்பபெட், பேஸ்புக், நெட்பிளிக்ஸ் போன்ற பல நிறுவனங்கள் கனடாவில் தனது புதிய வர்த்தகக் கிளையைத் திறந்துள்ளதால் இந்தியர்கள் கனடா செல்ல அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.