'ஒரேயொரு பெண்ணுக்கு வந்த பாசிட்டிவ் முடிவால்'... 'முதல்முதலாக லாக்டவுனை அறிவித்துள்ள நாடு!'...
முகப்பு > செய்திகள் > உலகம்பூடான் நாட்டில் பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து முதல்முதலாக அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் வேகமாகப் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனாவால் கடந்த மார்ச் மாதம் முதல் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சில நாடுகளில் சிறு, சிறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் ஊரடங்கு முழுமையாக விலக்கிக் கொள்ளப்படாத நிலையே இன்னும் நீடித்துவரும் சூழலில், பூடான் நாட்டில் இதுவரை ஊரடங்கு அமல்படுத்தப்படாமல் இருந்தது. முன்னதாக கடந்த மார்ச் மாதம் பூடான் வந்த அமெரிக்க சுற்றுலாப் பயணிக்கு கொரோனா கண்டறியப்பட்டதும், தன்னுடைய நாட்டு எல்லைகளை மூடிய பூடான் அரசு, நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உறுதியான 113 வெளிநாட்டு பயணிகளை உடனடியாக தனிமைப்படுத்தியது.
இந்நிலையில் குவைத்தில் இருந்து திரும்பிய 27 வயது பூடானிய இளம் பெண் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தபோது முதலில் நடத்தப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என வந்ததால் முகாமில் இருந்து அனுப்பட்டுள்ளார். ஆனால் அவர் வெளியேறிய பின் வந்த அடுத்த பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதற்கிடையே அவர் பூடானில் பல இடங்களுக்குச் சென்று வந்தது தெரிய வந்ததால், பாதிப்பு பரவாமல் இருக்க முதல்முதலாக தற்போது தேசிய ஊரடங்கை பூடான் அரசு அறிவித்துள்ளது. அனைத்து பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களை மூடவும், மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.