உளவு பார்த்த பாகிஸ்தானின் ஆளில்லா ட்ரோன் விமானம் .. சுட்டுத்தள்ளிய இந்திய ராணுவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Selvakumar | Feb 26, 2019 02:29 PM
குஜராத் மாநிலத்தில் வானில் பறந்த ஆளில்லா சிறிய விமானத்தை இந்திய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை இன்று அதிகாலை 3:30 மணிக்கு காஷ்மீரின் ஆக்கிரமிப்பு பகுதியில் தாக்குதல் நடத்தியது. இதில், மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம் பால்கோட் என்னும் பகுதியில் இருந்த தீவிரவாதிகளின் முகாம் மீது 1000 கிலோ அளவிலான குண்டுகள் வீசப்பட்டது.
இதனையடுத்து இந்த தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் உறவினர் உட்பட பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை செயலர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குஜராத்-பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள சர்வதேச எல்லையான கட்ச் என்கிற பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த ஆளில்லா விமானமான ட்ரோன் பறந்துள்ளது. இதனைப் பார்த்த இந்திய ராணுவத்தினர் உடனடியாக அதனை சுட்டு வீழ்த்தியுள்ளனர். பின்னர் ட்ரோனை கைப்பற்றி ஆய்வு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.