'வீட்ல ஹார்ட் பேசன்ட் இருக்காங்க'... 'கொரோனா சிகிச்சை முடிந்து வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி'... சென்னையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிகழ்வு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனாவால் பலரும் கடுமையான இன்னல்களைச் சந்தித்து வருகிறார்கள். ஒரு பக்கம் பொருளாதார பிரச்சனைகள் சூழ்ந்திருக்கும் நிலையில், மற்றொரு பக்கம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் சந்திக்கும் இன்னல்கள் என்பது சொல்லி மாளாத வகையில் உள்ளது.

சென்னை குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரத்தில் தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் குமார். இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை முடிந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். இந்த சூழ்நிலையில் நகராட்சி அதிகாரிகள் அவரது வீட்டுக் கதவை முழுவதும் மூடும்படி இரும்பு தகரத்தைக் கொண்டு அடைத்துள்ளனர். இதைச் சற்றும் எதிர்பாராத அவர் அதிர்ச்சி அடைந்தார்.
அவரது வீட்டில் இருதய நோயாளிகள் உட்பட 4 பேர் வசிக்கும் நிலையில், ஜன்னல் வழியாகக் கூட பால் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளைப் பெற முடியாத சூழல் உள்ளது. கொரோனா சிகிச்சை முடிந்து வந்த பிறகு ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் உணவு உட்பட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காதவாறு முடக்கி வைத்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள நகராட்சி அதிகாரிகள், பாதிக்கப்பட்ட நபர் சிகிச்சை முடிந்து வந்தாலும், இன்னும் 14 நாட்கள் ஆகவில்லை எனவும், வீட்டில் உள்ளவர்களுக்கு உதவத் தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள். மேலும் கொரோனா பாதித்தவர்களின் வீடுகளில் தகரங்களைக் கொண்டு அடைப்பது வழக்கமான நிகழ்வு தான் எனவும் கூறியுள்ளார்கள்.

மற்ற செய்திகள்
