'உன் வயசு பொண்ணுங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு'... 'நீ ஏன் படிக்குறன்னு அப்பா கேட்டது இல்ல'... 'ஒரே மாவட்டத்தில் 3 மாணவிகள்'... ஐஏஎஸ் தேர்வில் புதிய சாதனை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஐஏஎஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த 3 மாணவிகள் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளார்கள்.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற யூபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக இளைஞர் கணேஷ்குமார் பாஸ்கர் தேசிய அளவில் 7வது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தைச் சேர்ந்த 3 பெண்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்கள்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த முந்திரி விவசாயி ராமநாதன் மகள் ஐஸ்வர்யா தமிழக அளவில் இரண்டாவது இடத்தையும், அகில இந்திய அளவில் 47வது இடத்தையும் பெற்றுள்ளார். ஐஸ்வர்யா, கடலூர் மாவட்டத்தில் பள்ளிப் படிப்பை முடித்து, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கட்டுமான துறையில் பொறியியல் படிப்பை நிறைவு செய்து தற்போது தனது இரண்டாவது முயற்சியில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். சிறு வயதிலிருந்தே ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு இருந்த ஐஸ்வர்யாவிற்கு அவரது பெற்றோர் பெரும் ஆதரவாக இருந்துள்ளார்கள்.
குறிப்பாக ''என்னுடைய வயதிலிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் திருமணமாகிவிட்டது. ஆனால், எனது தந்தை என்னை எதற்கும் கட்டாயப்படுத்தாமல், தேவையான அனைத்தையும் எனக்குச் செய்து கொடுத்தார்'' என ஐஸ்வர்யா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். அதேபோன்று தமிழக அளவில் மூன்றாவது இடத்தை பெற்ற பிரியங்காவின் தந்தை சிவப்பிரகாசம் சுகாதாரத்துறை ஆய்வாளர் அவரது தாய் பரிமளா போஸ்ட் மாஸ்டர். அவரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பயோ-மருத்துவ பிரிவில் பொறியியல் படித்துவிட்டுக் கடந்த 2018ம் ஆண்டு தேர்வை எழுதி அதில் தோல்வியைத் தழுவியுள்ளார். இருப்பினும் மனம் தளராமல் 2019ஆம் ஆண்டு தேர்வெழுதி அகில இந்திய அளவில் 68வது இடத்தையும், தமிழக அளவில் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளார்.
இதனிடையே பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டைக் கிராமத்தைச் சேர்ந்த சம்பத் மகள் கிருஷ்ணப்பிரியாவும் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இவர், அகில இந்திய அளவில் 514வது இடம் பிடித்துள்ளார். குறிப்பாக, கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் வென்றிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
