'அவங்க ரெண்டு பேர் மேல தான் எனக்கு டவுட்...' 'என் பேத்திய ஏதோ பண்ணிருக்காங்க...' 'என் காதுல பூ சுத்த பாக்குறாங்க...' அதிர்ச்சி சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Feb 13, 2020 05:51 PM

5 வயதுச் சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், தந்தை மற்றும் அவரின் இரண்டாவது மனைவியிடம் போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

There is mystery in the granddaughter\'s death

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த ஆயர்பாடியைச் சேர்ந்தவர் பாபு, பரோட்டா மாஸ்டர். இவரது மனைவி பேபி. இவர்களது மகன் சங்கர், ஏழுஆண்டுகளுக்கு முன் கோயம்புத்தூரில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்தார். அப்போது, தன்னுடன் வேலை பார்த்த தஞ்சாவூரைச் சேர்ந்த பிரியா என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சௌமியா என்ற பெண் குழந்தை பிறந்தது.

பின்னர், கருத்து-வேறுபாடு காரணமாக கணவரிடம் குழந்தையை விட்டுவிட்டு பேபி பிரிந்து சென்றார். சங்கரும் குழந்தையைப் பார்த்துக்கொள்ள முடியாமல் காவேரிப்பாக்கத்தில் வசிக்கும் தன் பெற்றோரிடம் கொடுத்துவிட்டார். பரோட்டா மாஸ்டரான சங்கரின் தந்தைக்குத் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரத்தில் உள்ள ஹோட்டலில் வேலை கிடைத்தது.

இதனால், தன் பேத்தியை வேலை செய்யும் இடத்துக்கே அழைத்துச் சென்று தங்க வைத்துக் கொண்டார். குழந்தை சௌமியாவுக்கு இப்போது 5 வயது ஆகிறது. இந்த நிலையில், சென்னை மதுரவாயலைச் சேர்ந்த சந்தியா (21) என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்ட சங்கர், வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகில் உள்ள முசிறிப் பகுதியில் குடும்பம் நடத்திவந்தார். இரண்டாவது மனைவி சந்தியா தற்போது 7 மாதக் கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த நிலையில், சொந்த ஊரான காவேரிப்பாக்கம் பகுதிக்குப் பேத்தியை அழைத்துக்கொண்டு பாபு வந்தார். மகளைப் பார்க்கும் ஆசையில் இரண்டாவது மனைவியை அழைத்துக் கொண்டு அங்கு சென்றார் சங்கர். ‘என் மகளை என்னிடமே விட்டுவிடுங்கள். நானே பார்த்துக்கொள்கிறேன்’ என்று சண்டைபோட்டு மகளை அழைத்துச் சென்றார் தந்தை சங்கர்.

இந்நிலையில், உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் சிறுமி சௌமியா வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தாத்தா பாபுவுக்கு உறவினர்கள் தகவல் சொல்லியிருக்கிறார்கள். அவர் பதறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து பார்த்தபோது, பேத்தி சௌமியா இறந்துவிட்டதாகக் கூறியிருக்கிறார்கள். பேத்தியின் சடலத்தைக் கட்டிப்பிடித்துக் கதறி அழுதார்.

இதையடுத்து, காவேரிப்பாக்கம் காவல் நிலையத்துக்குச் சென்று பேத்தி சாவில் மர்மம் இருப்பதாகப் புகார் அளித்தார் பாபு. புகாரில், ‘‘என் பேத்தியை மகன் சங்கரும் அவரின் இரண்டாவது மனைவி சந்தியாவும் சேர்ந்து ஏதோ செய்துள்ளனர். என்னிடம், சௌமியா தவறி விழுந்ததில் காயம் ஏற்பட்டதாகக் கூறி என் காதில் பூ சுத்த பார்க்கிறார்கள்’’ என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, வழக்குப் பதிவு செய்த போலீசார், சங்கரிடமும் அவரின் மனைவியிடமும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #INVESTIGATION