'திடீர்னு ஒரே துர்நாற்றம், தாங்க முடியல'... 'கடலில் நிகழ்ந்த மாற்றம்'.... 'அதிர்ச்சி அடைந்த மக்கள்'... விஞ்ஞானி விளக்கம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | May 06, 2020 01:27 PM

திடீரென கடலில் நிறம் மாறியதோடு, அந்த பகுதியிலிருந்து துர்நாற்றமும் வீசத் தொடங்கியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கான காரணம் குறித்து விஞ்ஞானி ஒருவர் தற்போது விளக்கமளித்துள்ளார்.

There is a Sudden change in Mandapam sea water colour, People are scar

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தென் கடல் பகுதியில் கடந்த சில நாட்களாகவே கடல் நீர் நிறம் மாறி வருகிறது. காந்திநகர் முதல் மண்டபம் மற்றும் வேதாளை வரையிலான கடல் பகுதியில் இந்த நிற மாற்றம் காணப்படுகிறது. அதோடு அந்த பகுதியில் கடுமையான துர்நாற்றமும் வீசி வருகிறது. இது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எதனால் இந்த மாற்றம் என மக்கள் பலரும் குழப்பமடைந்தார்கள்.

இந்நிலையில் எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த மாற்றம் குறித்து, மண்டபத்தில் உள்ள மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் பார்வையிட்டு கடல் நீரைச் சேகரித்து பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி ஜெயக்குமார், இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். அதில், ''கடல் நீரில் பூங்கோறை என்று சொல்லக் கூடிய ஒரு வகையான பாசியின் விதைகள் அதிக அளவில் படர்ந்துள்ளது. இதனால் 3 நாட்களாகக் கடலின் நிறம் மாறியுள்ளது.

மேலும் ஆழ்கடலில் கடலின் அடியில் வளர்ந்து நிற்கும் இந்த பூங்கோறை பாசி கடல் நீரில் முழுவதுமாக படர்ந்துள்ளது. காற்றின் வேகம் மற்றும் கடல் நீரோட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் இந்த பாசியும் கண்ணுக்குத் தெரியாமல் அப்படியே அழிந்துபோகும். ஆனால் தற்போது கடலில் அலை, நீரோட்டம் இல்லாமல் அமைதியாகக் காணப்பட்டு வருவதால், கடலில் படர்ந்துள்ள பாசி தெளிவாகத் தெரிகிறது.

இன்னும் சில வாரங்களில் காற்று சீசன் வர இருக்கிறது. அப்போது இயற்கையாகவே பாசி அனைத்தும் அழிந்து கரை ஒதுங்கிவிடும். இதனால் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என அவர் கூறியுள்ளார்.