‘இளைஞர்களின் வழிகாட்டி அவர்’... ‘தமிழக வீரர் நடராஜனை’... ‘பாராட்டி, வாழ்த்திய தெலுங்கானா ஆளுநர்’...!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக வீரர் நடராஜன் இளைஞர்களின் வழிகாட்டியாக திகழ்கிறார் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அமீரகத்தில் ஐபிஎல் 13-வது சீசன் நடைபெற்றது. இதில் தமிழக வீரரும், வேகப்பந்து வீச்சாளருமான நடராஜன், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். அப்போது தோனி, கோலி போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்களையும், தனது சிறப்பான யார்க்கரால் விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் பெற்றார்.
பிளே ஆஃப் வரை சன்ரைசர்ஸ் அணி விளையாட நடராஜனும் ஒரு காரணமாக அமைந்ததால் பாராட்டுக்கள் குவிந்தன. இதையடுத்து, அவரை இந்திய அணியில் தேர்வு செய்ய கோரிக்கை வலுத்து வந்த நிலையில், காயம் காரணமாக வருண் சக்ரவர்த்தி விலக, இந்தியா - ஆஸ்திரேலியா தொடரில் தமிழக வீரர் சேர்க்கப்பட்டார். இதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘தன்னுடைய திறமையான பந்து வீச்சால் இந்திய கிரிக்கெட் அணிக்கு சேலம் சின்னப்பம்பட்டி சேர்ந்த தமிழக வீரர் நடராஜன் தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அவருடைய லட்சியம் நிறைவேறும். இந்திய அணிக்காக பல சாதனைகளை படைக்கவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தமிழிசை கூறியுள்ளார்.