'5 மாசம் பல்ல கடிச்சிட்டு இருந்தோம்'... 'சென்னையில் திறக்கப்படும் மால்கள்'... இனிமேல் ஷாப்பிங் எப்படி இருக்கும்?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து வணிக வளாகங்கள் இன்று முதல் திறக்கப்பட இருப்பதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகக் கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாகத் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் உள்ள வணிக வளாகங்கள் மூடப்பட்டது. கடந்த 5 மாதங்களுக்கு மேலாகத் தமிழகத்தில் வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள், மற்றும் பெரிய கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. தற்போது தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வணிக வளாகங்களைத் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது வணிக வளாகங்களில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத்தொடர்ந்து நேற்று வணிக வளாகங்களில் சீரமைப்பு மற்றும் தூய்மை பணிகள் நடைபெற்றன. 5 மாதங்களுக்குப் பிறகு வணிக நிறுவனங்கள் திறக்கப்படுகிறது என்பதால், வளாகத்தின் அனைத்து பகுதிகளிலும் தூய்மை பணிகள் தீவிரமாக நடந்தது. இதில் ஏராளமான பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வணிக வளாகங்களைச் சுத்தம் செய்தனர். இருப்பினும் வணிக வளாகங்கள் இன்றைக்குத் திறக்கப்படுமா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
இதற்கிடையே ஷாப்பிங் முறை கொரோனாவிற்கு முன்பு கொரோனாவிற்கு பின்பு என மறியுள்ளது என்றே சொல்லலாம். வணிக வளாகங்களில் பாதுகாப்பு நடைமுறைகள் என்பது அதிகமாக இருக்கும். மால்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அரசின் பாதுகாப்பு நெறிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுவார்கள். இதனிடையே வணிக வளாகங்கள் திறக்கப்படுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள வியாபாரிகள், ''5 மாதங்களாகப் பல்லைக் கடித்துக் கொண்டு தான் இருந்தோம். தற்போது கடைகள் திறக்கப்பட்டாலும் மக்கள் உடனே வருவார்களா என்பது சந்தேகமே.
இருப்பினும் முன்பு உள்ள நிலைமையைப் பார்க்கும் போது நிச்சயம் இது பாராட்டப்படவேண்டிய ஒன்று என வியாபாரிகள் கூறியுள்ளார்கள். இதற்கிடையே வணிக வளாகங்களில் திரையரங்கு பிரிவில் ஏராளமான பணியாளர்கள் வேலை பார்க்கிறார்கள். எனவே அவர்களின் நிலையையும் கருத்தில் கொண்டு திரையரங்குகளையும் திறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும்'' என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது.