"எந்த நிலைமையில இருக்கோம்ன்னு தெரியுமா, எங்க பொழப்பே இதுல தான்".. திருடனிடம் கண்ணீர் விட்டு அழுத பெண்
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலம் பகுதியில் திருட்டு நடைபெற்ற நிலையில், அதன் பின்னர் நடந்த சம்பவம் தற்போது பலரையும் மனம் உருக வைத்து வருகிறது.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கோட்டை பகுதியில் இரவு நேரத்தில் பெண் ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்போது அந்த பெண்ணிடம் இருந்து இளைஞர் ஒருவர் செல்போனை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்ததாகவும் சொல்லப்படுகிறது.
தனது செல்போன் திருட்டு போனதால் அடுத்த நொடியே கத்தி கூச்சல் போட்டுள்ளார் அந்த பெண். இதனால், அப்பகுதியில் இருந்தவர்கள், செல்போனை திருடி விட்டுச் சென்ற இளைஞரை ஓடி சென்று பிடித்தனர். தொடர்ந்து, அவரை போலீசாரிடம் ஒப்படைப்பதாக காவல் நிலையத்திலும் அங்கே இருந்தவர்கள் தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து, செல்போனை பறி கொடுத்த அந்த பெண், திருடனிடம் தனது குடும்ப சூழ்நிலையை சொல்லி கண்ணீர் விடவும் செய்தார். அப்போது பேசும் அந்த பெண், "பசிக்குதுன்னா கூட என்கிட்ட கேட்டு இருக்கலாம். தங்கச்சி எனக்கு பசிக்குது ஏதாவது வாங்கி குடுங்கன்னு கேட்டா கூட சத்தியமா வாங்கி கொடுத்திருப்பேன். நாங்க என்ன நிலைமையில் இருக்கோம்ன்னு உனக்கு தெரியுமா?. இன்னைக்கு நீ இந்த போன தூக்கிட்டு போயிருந்தன்னா சோற்றுக்கு பதிலா விஷத்தை தான் நாங்க குடிச்சிட்டு சாகணும்.
எங்க பொழப்பே இதுல தான். புருஷன் ஒரு டிரைவர். அவருக்கு Ola ஓட்டுறதுக்கு ஒரு போன் வேணும். சொல்லு எதுக்கு என் பொழப்ப இப்படி கெடுத்த. உன் பொண்டாட்டி, புள்ளைங்க இப்படி நிக்கும்ல. எங்க பாவத்தை கொட்டிக்காதீங்க.
நான் யாரையும் அடிக்கவும் மாட்டேன், திட்டவும் மாட்டேன். நான் இப்ப விழுந்துட்டேன் தெரியுமா. எனக்கு ஏதாவது ஒண்ணு ஆகி இருந்தா என் பிள்ளை தானே அனாதையா நின்னுருக்கும்" என கண்ணீருடன் அந்த பெண் உணர்ச்சிவசமாக பேசும் விஷயம் அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.