பசியோட தூங்குற ‘வலி’ எனக்கு தெரியும்.. அப்போதான் ஒரு ‘முடிவு’ எடுத்தேன்.. திரும்பி பார்க்க வச்ச ரியல் ‘ஹீரோ’..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சாலையில் இருக்கும் ஆதரவற்றோர், யாசர்களுக்கு ‘அட்சயம்’ என்ற அமைப்பின் மூலம் உதவி வரும் பேராசிரியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சாலையில் செல்லும்போது நம்மிடம் யாசகம் கேட்டும் யாசகர்களுக்கு நம் கையில் உள்ள சில்லறைகளை கொடுத்துவிட்டு கடந்து சென்றுவிடுவோம். ஆனால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் நவீன் குமார் அவர்களது வாழ்கையில் மாற்றத்தை கொண்டு வரும் நோக்கில் முயன்று வருகிறார். இந்தியாவில் யாசகர்களே இருக்க கூடாது என்ற பெருங்கனவுடன் ‘அட்சயம்’ என்ற அறக்கட்டளையை நிறுவியுள்ளார்.
இதுகுறித்து தெரிவித்த பேராசிரியர் நவீன் குமார், ‘இதெல்லாம் நான் இன்ஜினீயரிங் படிக்கும்போது ஆரம்பமானது. அப்போது யாரவது யாசகம் கேட்டால் என் கையில் உள்ள காசை கொடுத்துவிடுவேன். எங்கள் குடும்பம் பொருளாதார ரீதியில் பின் தங்கியது. ஆனாலும் யாசகம் கேட்டு வருபர்களுக்கு உதவி செய்வேன். அதனால் சில சமயம் கையில் காசு இல்லாமல் பசியோடு தூங்கிய நாள்களும் உள்ளது.
அப்போதுதான் யாசகம் கேட்டு வருபவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என எண்ணம் எனக்குள் பிறந்தது. அதற்காக நண்பர்கள், ஆசிரியர்கள் என பலரிடமும் உதவி கேட்டேன். ஆனால் எல்லோரும் என் முயற்சியை தட்டிக் கழித்தனர். படிப்பை முடித்தபின், நான் படித்த கல்லூரியிலேயே பேராசிரியராக வேலைக்கு சேர்ந்ததும், மீண்டும் யாசகர்களுக்காக உதவ தொடங்கினேன்.
அவர்கள் யாசகம் எடுப்பதற்கான காரணம் என்ன? என்பதில் ஆரம்பித்து அனைத்திற்கும் தீர்வு காண முயன்றேன். வேலைக்கு செல்ல விரும்புவர்களுக்கு வேலை, குடும்பத்துடன் சேர விரும்புவர்களுக்கு குடும்பத்தோடு சேர்த்து வைப்பது என செய்து வருகிறோம். இதனை பல தன்னார்வளர்களின் உதவியுடன் தொடர்ந்து செய்து வருகிறோம்.
அட்சயம் அறக்கட்டளையின் மூலம் இதுவரை சுமார் 5000 பேருக்கு மறுவாழ்வு, 600 பேருக்கு நல்ல வேலை பெற்று கொடுத்துள்ளோம். தற்போது சிறியதாக மறுவாழ்வு மையம் அமைத்துள்ளோம். இங்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சிகிச்சை கொடுத்து வருகிறோம்’ என நவீன் குமார் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு இவரது சேவையை பாராட்டி இந்திய அரசு ‘தேசிய இளைஞர்’ விருது கொடுத்து சிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
