'ஒரு பக்கம் கொரோனா பீதி, இன்னொரு பக்கம் இதுவேறையா'... தூக்கம் தொலைத்த சென்னை மக்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் ஒரு பக்கம் கொரோனா குறித்த அச்சம் நிலவி வரும் நிலையில், மறுபக்கம் கொசுத் தொல்லை பெரும் பிரச்சனையாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

கோடைக் காலம் முடிந்த நிலையில், சென்னையில் கொசுக்களின் நடமாட்டம் வெகுவாக அதிகரித்து இருப்பதைப் பார்க்க முடிகிறது. இரவில் அயர்ந்து தூங்கும் நிலையில் ஊசியைக் குத்துவது போலக் கடிக்கும் கொசுக்களால் மக்கள் நிம்மதியைத் தொலைத்து விடுகிறார்கள் என்பதே உண்மை. ஏற்கனவே மக்கள் மத்தியில் கொரோனா குறித்த அச்சம் நிலவி வரும் நிலையில், கொசுத் தொல்லை சென்னை மக்களுக்கு மற்றொரு தலைவலியாக மாறியுள்ளது. இதனால் கொசுக்கடியால் தூக்கத்தைத் தொலைத்து மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
கொசுவை ஒழிக்கும் நடவடிக்கையில் கொசுவர்த்தி சுருள், திரவக்கொசு விரட்டி போன்றவற்றைப் பயன்படுத்தினாலும், அது பெரிய அளவில் கை கொடுக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும். இதனால் வீடுகளில் தற்போது அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக ‘கொசு பேட்களும் வாங்கி வருகிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் பகலில் கொசு பேட்களுக்கு சார்ஜ் ஏறி கொண்டு தான் இருக்கிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கொசுத் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இரவில் நிம்மதியான தூக்கம் என்பதே இல்லாமல் போய்விட்டது. எனவே கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டும் மாநகராட்சி நிர்வாகம், கொசு ஒழிப்பு பணிகளிலும் தீவிரம் காட்ட வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் தினந்தோறும் கிருமிநாசினி தெளிப்பதுடன், கொசு மருந்து அடிக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும், எனக் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

மற்ற செய்திகள்
