"ஜீன்ஸ், லெக்கின்ஸ் அணிந்து கோவிலுக்கு வருவதை ஏற்க முடியாது.. செல்போன் தவிருங்கள்".. திருச்செந்தூர் கோவில் தொடர்பான வழக்கில் ஐகோர்ட்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருச்செந்தூர் முருகன் கோவிலில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கும்படி அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டிருக்கிறது மதுரை உயர்நீதிமன்ற கிளை.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோவில் உலக அளவில் பிரசித்திபெற்றது. முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றாக கருதப்படும் இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், சீதாராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் செல்போன் பயன்படுத்துவதை தடை செய்து உத்தரவிடவேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணா பிரசாத் ஆகியோர் முன்பு இன்று நடைபெற்றது. அப்போது பேசிய நீதிபதிகள்,"சிலர் விதிமுறைகளை மீறி சிலைகள் முன்பு போட்டோ எடுத்து யூடியூப் உள்ளிட்டவற்றில் பதிவிடுகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள் என்ன சத்திரமா? தமிழகத்தில் உள்ள கோவில்களில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை உள்ளது. திருப்பதி கோவிலில் வாசலில் கூட புகைப்படம் எடுக்க முடியாது. ஆனால், தமிழகத்தில் உள்ள கோவில்களில் மட்டும் சாமி சிலைகள் முன்பு செல்ஃபி எடுத்துக் கொள்கின்றனர்" என்றனர்.
மேலும், திருச்செந்தூர் கோவிலுக்கு உள்ளே அர்ச்சர்கள் மற்றும் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த உடனடியாக தடை விதிக்குமாறு அறநிலையத்துறை ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், கோவிலுக்குள் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் மீண்டும் ஒப்படைக்கக்கூடாது எனக் கூறிய நீதிபதிகள் இதுகுறித்த சுற்றறிக்கையை உடனடியாக கோவிலுக்கு அனுப்புமாறு அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டனர்.
இதனையடுத்து, பக்தர்கள் ஜீன்ஸ், ட்ரவுசர், லெக்கின்ஸ் ஆகிய ஆடைகளை அணிந்து கோவிலுக்கு வருவது வேதனை அளிப்பதாக கூறிய நீதிபதிகள்,"கோவில்கள் ஒன்றும் சுற்றுலா தளங்கள் கிடையாது. நாகரிகமாக உடை அணிந்து கோவிலுக்கு வர வேண்டும்" என கருத்து தெரிவித்தனர்.
Also Read | IPL 2023 ஏலம்.. எங்கே, எப்போ நடக்க போகுது?.. வெளியான தகவல்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..!