VIDEO: "அவ சாகும்போது கூட என்ன காப்பாத்துனா SIR!".. 26 வருடங்களாக வளர்த்த லட்சுமி யானை.. இறப்பு தாளாமல் கதறி அழுத பாகன் சக்திவேல்.! LAKSHMI ELEPHANT
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் ஓய்வில் இருந்த யானை லட்சுமி நடைபயிற்சியின் போது மயங்கி விழுந்து மரணம் அடைந்தது.
கடந்த 1996ம் ஆண்டு இக்கோவிலுக்கு அழைத்துவரப்பட்ட லட்சுமி யானை புதுச்சேரி பக்தர்களுக்கு பிடித்தமான யானையாகவும் இருந்து வந்துள்ளது. அண்மை காலமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படும் லட்சுமி யானை நடை பயிற்சியின் போது மயங்கி விழுந்து அங்கேயே உயிரிழந்தது. முன்னதாக லட்சுமி யானை வேதபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் இருக்கும் கொட்டிலில் 15 நாட்கள் ஓய்வெடுத்து வந்தது.
இந்த ஓய்வு காலத்தில் யானை லட்சுமி கோயிலுக்கு வரவில்லை. பார்வையாளர்களும் யானையை பார்க்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது. தவிர பழ வகைகளை தவிர்த்து களி, பனை, தென்னை மட்டை, அரசமர இலை மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் லட்சுமிக்கு வழங்கப்பட்டு வந்தன.
இந்நிலையில்தான் நடை பயிற்சி சென்றபோது மயங்கி விழுந்து உயிரிழந்த லட்சுமி யானைக்கு பக்தர்கள், புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், புதுவை முன்னாள் முதல்வர் நாரயணசாமி உள்ளிட்டோரும் நேரில் வந்து கண்டு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் செய்தியாளர்களிடம் நா தழுதழுக்க பேசிய பாகன் சக்திவேல், “லட்சுமி என்னை விட்டு போய்விட்டாள்.. 26 வருடங்களாக அவளை குழந்தை போல் வளர்த்தேன். என் வீட்டை விடவும் லட்சுமி மேல பாசமா இருப்பேன். அவளும் என் மேல பாசமா இருப்பா.. லட்சுமியிடம் எப்போதும் பார்க்காத திடீர் கோபத்தை அன்று பார்த்தேன். முதல் நாள் சரியாக சாப்பிடவில்லை. நடை பயிற்சி கூட்டிச்சென்றால் சரியாகும் என்று டாக்டர் சொன்னார். அதன்படி ஈஸ்வரன் கோவில் பகுதியில் நடை பயிற்சிக்கு அழைத்துப் போனேன்.
திரும்பவும் கொட்டகைக்கு வரும் வழியில் சரியாக கோவிலுக்கு செல்லும் பாதையில் நடந்து போது லட்சுமிக்கு திடீரென கோபம் வந்துவிட்டது. ஆனாலும் அந்த கோபத்தை என் மீது காட்டாமல் பக்கத்தில் இருந்த காரின் மீது மோதி வலது காலை அப்படியே ஊன்றியது. ஆனால் இந்த பக்கம் நான் நிற்பதை அறிந்த, லட்சுமி என் மீது சாய்ந்து விடாமல் இருப்பதற்காக இடது பக்கம்தான் விழுந்தது. சாகும்போது கூட எனது உயிரை காப்பாற்றி விட்டு அவள் தன் உயிரை விட்டுவிட்டாள்” என்று கதறி அழுதார்.
பாகன் சக்திவேலுக்கு புதுச்சேரி மக்களும், மணக்குள விநாயகர் கோவில் பக்தர்களும், உலகெங்கிலும் இருந்து இணையதளங்கள் வாயிலாக பலரும் தங்களுடைய ஆறுதலை தெரிவித்து வருவதுடன், இவ்வளவு பேரன்புக்கு சொந்தமான லட்சுமியின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என குறிப்பிட்டு வருகின்றனர்.