அட...! நம்ம கடலை மிட்டாய்க்கும் 'அந்த விஷயம்' கிடைச்சாச்சு...! '2014-லையே அப்ளை பண்ணினது...' பெருமை சேர்க்கும் சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Apr 30, 2020 08:17 PM

2014 ஆம் ஆண்டு கோவில்பட்டி சப்கலெக்டரின் உதவியால் விண்ணப்பிக்கப்பட்ட கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு 2020 ஆம் ஆண்டு புவிசார் குறியீடு கிடைத்துள்ள சம்பவம் அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Kovilpatti seabed has got the geological code

தமிழ்நாட்டில் எப்பொழுமே நாம் ஒரு பொருளை உபயோகிக்கும் பொழுதும் சரி, இல்லை ஒரு திண்பண்டத்தை வாங்கும் போதும் அதன் பெயரோடு, அதன் பிறப்பிடத்தையும் குறிப்பிடுவது வழக்கம். அதையே உலகம் முழுவதும் குறிப்பிட நமக்கு புவிசார் குறியீடு அவசியம். தற்போது நமக்கு கடலை மிட்டாய்க்கு 'கோவில்பட்டி கடலைமிட்டாய்' என்னும் புவிசார்பு குறியீட்டை வழங்கியுள்ளது மத்திய அரசு.

இதற்கு முன்பே நம்மூரின் `திருநெல்வேலி அல்வா’, 'பழனி பஞ்சாமிர்தம்' , 'மதுரை மல்லி',  'திண்டுக்கல் பூட்டு', 'கொடைக்கானல் பூண்டு' என பட்டியல் உள்ளது.

அதேபோல தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டதின் கோவில்பட்டி, கடலைமிட்டாய்க்கு பெயர்போனது. தூத்துக்குடியின் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் மானவாரி கரிசல் மண்ணின் தரமும், அம்மாவட்டத்தின் தண்ணீரின் சுவையும் கடலை மிட்டாய்க்கு தனி சுவை தருகிறது எனலாம்.

இதன் சுவையின் காரணமாக வியாபாரிகள் கோவில்பட்டி கடலை மிட்டாய்கள் பாக்கெட்டுகளில் அடைத்து, பண்டல்களாக அடுக்கி வெளி மாவட்டங்கள் மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியும் செய்கின்றனர்.

கோவில்பட்டி கடலை மிட்டாயின் சுவை அறிந்த அப்போதைய கோவில்பட்டி சப்கலெக்டருமான டாக்டர். விஜய கார்த்திகேயன் (தற்போதைய திருப்பூர் மாவட்ட ஆட்சியர்) கடந்த 2014ஆம் ஆண்டு கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கிடக்கோரி விண்ணப்பித்துள்ளார். கோவில்பட்டி சப்கலெக்டர் தன்னுடைய பெயரில் கடிதத்தை அனுப்பியதால் மத்திய அரசானது கோவில்பட்டியில் இயங்கும் சங்கத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தியது.

இதனையடுத்து தன்னுடைய முழு முயற்சியால்,  கோவில்பட்டியில் உள்ள கடலைமிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளை ஒருங்கிணைத்து, `கோவில்பட்டி வட்டார கடலைமிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கம்' என்ற புதிய சங்கத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் 2017-ல் மீண்டும் கோவில்பட்டி கடலை மிட்டாய் என்று புவிசார் குறியீடு வழங்க மத்திய அரசிற்கு விண்ணப்பிக்கப்பட்டது.

அதன் பலனாக 5 ஆண்டுகள் கழித்து தற்போது கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு மத்திய அரசு புவிசார் குறியீடு அளித்துள்ளது. இது கோவில்பட்டி தூத்துக்குடி மக்களை மட்டும் அல்லாது தமிழகத்தையே பெருமைபடுத்திய செய்தியாக கருதப்படுகிறது.

Tags : #KOVILPATTI