"எண்ணி முடிக்க 2 மணி நேரம் ஆகிடுச்சு".. 8 மூட்டையில் 10 ரூபாய் நாணயங்கள்.. வாயடைத்து போன பைக் ஷோரூம் ஊழியர்கள்
முகப்பு > செய்திகள் > தமிழகம்தான் விரும்பிய பைக்கை வாங்க மூட்டை மூட்டையாக 10 ரூபாய் நாணயங்களுடன் ஷோரூம் சென்ற இளைஞர் குறித்த செய்தி, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கெலமங்கலம் என்னும் பகுதியை சேர்ந்தவர் ராஜீவ். இவர் அங்குள்ள தனியார் நர்சிங் ஹோம் ஒன்றில் நிர்வாக இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் நீண்ட நாட்களாகவே அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்க விரும்பி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அதே வேளையில், தனக்கு பிடித்த பைக்கை வாங்க மிகவும் வித்தியாசமான யோசனை ஒன்றையும் ராஜீவ் கையில் எடுத்துள்ளார். தற்போது புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்களை பெரும்பாலான கடைகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் வாங்க மறுக்கின்றனர். அப்படி இருக்கையில், அனைத்து இடங்களில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என்பதை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் களமிறங்கி உள்ளார் ராஜீவ். இதற்காக கடந்த 3 ஆண்டுகளாக தனது நண்பர்கள் சிலருடன் இணைந்து கடைகள், ஓட்டல்கள் என பல இடங்களில் அலைந்து திரிந்த ராஜீவ், சேகரித்த நாணயங்கள் அனைத்தையும் மொத்தம் 8 மூட்டைகளில் கட்டிக் கொண்டு, ஓசூர் பகுதியில் உள்ள பைக் ஷோ ரூம் ஒன்றிற்கு வந்துள்ளார்.
இதன் பின்னர், அங்கிருந்த நிர்வாகிகளிடம் விவரத்தை கூறியதும் அவர்கள் வியப்படைந்து போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. நாணயங்கள் பெற்றுக் கொண்டு, பைக்கையும் வழங்க அவர்கள் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ராஜீவ் மூட்டை மூட்டையாக கொண்டு வந்த நாணயங்களை தரையில் கம்பளம் விரித்து கொட்டி, எண்ணும் பணியிலும் ஷோ ரூம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து, சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக எண்ணும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள், அதில் தவணைத் தொகை 1,80,000 இருந்ததையும் மீதி தொகையை லோன் மூலம் வழங்க ராஜீவ் உறுதி அளித்ததையும் ஏற்றுக் கொண்டு, புதியரக நவீன வடிவமைப்பு கொண்ட பைக்கை அவரிடம் ஒப்படைத்தனர்.
10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற ஒரு கருத்து மக்கள் மத்தியில் பரவலாக இருந்து வருவதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், அதனை உடைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு முயற்சியில் இறங்கி வெற்றியும் கண்டுள்ளார் இளைஞர் ராஜீவ்.