எவ்ளோ சொன்னாலும் கேட்க மாட்டீங்களா?... தடியடி நடத்திய போலீசார்... சிதறி 'ஓடிய' பொதுமக்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா ஊரடங்குக்கு மத்தியிலும் பொதுமக்கள் இதுபோன்ற செயல்களை செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் அருகே கல்பட்டு என்னும் கிராமத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த ஏரியில் மழைக்காலங்களில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரில் பல்வேறு வகையான மீன் குஞ்சுகள் விடப்பட்டு வளர்க்கப்பட்டது. இவை நன்கு வளர்ந்த நிலையில் மீன்பிடிக்க பொதுப்பணித்துறையினர் குத்தகை முறையில் ஏலம் விட்டனர்.
ஏலம் எடுத்த குத்தகைதாரர் மீன்களை பிடித்து விற்பனை செய்து வந்தார். இது முடிந்ததும் மீன்பிடி திருவிழாவை நடத்தி இருக்க வேண்டும். ஆனால் ஊரடங்கு காரணமாக மீன்பிடி திருவிழா நடத்த முடியவில்லை. இந்த நிலையில் நேற்று தடையை மீறி 30-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த மக்கள் ஏரியில் இறங்கி மீன்பிடி திருவிழாவை நடத்தினர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு குழுமியிருந்த 1000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் பொதுமக்கள் கேட்பதாக இல்லை. இதையடுத்து ஏரிக்குள் இறங்கிய போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.