'அந்த ஆபத்திலிருந்து உங்கள காத்தது இந்த 'பழனிச்சாமி' தான்'... 'இவங்க ஓட்டு கண்டிப்பா திமுகவுக்கு இல்ல'... முதல்வர் அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்முக ஸ்டாலினுக்கு விவசாயிகளைப் பற்றியும், விவசாயத்தைப் பற்றியும் கவலை இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே, அ.தி.மு.க வேட்பாளர் ஏ.என்.ஆர். பன்னீர்செல்வத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய முதல்வர், ''மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி அளித்தார். விவசாயிகளின் பாதிப்பை உணராமல் அவர்களது நிலங்களைப் பிடுங்கி தனியாரிடம் ஒப்படைக்க முற்பட்டார்கள்.
அப்போது, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றாமல் விவசாயிகள் பாதுகாக்கப்பட்டனர். ஸ்டாலின் விவசாயிகளின் நிலத்தைப் பறிக்க நினைத்தார். அந்த ஆபத்திலிருந்து காப்பாற்றியவர் இந்த பழனிசாமி. ஸ்டாலினுக்கு விவசாயிகளைப் பற்றியும், விவசாயத்தைப் பற்றியும் கவலை இல்லை. எனவே, ஸ்டாலினுக்கு விவசாயிகளின் ஓட்டு கூட கிடைக்காது.
இந்தியாவிலேயே ஊழலுக்காகக் கலைக்கப்பட்ட ஒரே அரசு தி.மு.க. அரசு. கண்ணுக்குத் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்தது. அ.தி.மு.க.வை பொறுத்தவரைச் சிறப்பான ஆட்சியைத் தமிழகத்தில் நடத்தி வருகிறது. பல்வேறு துறைகளில் விருதுகளை வாங்கியுள்ளது'' என முதல்வர் பேசினார்.