'சென்னை மளிகை கடைக்காரருக்கு கொரோனா...' 'யாரெல்லாம் அவர் கடையில மளிகை சாமான்கள் வாங்கியிருக்காங்க...' தீவிர தேடுதல் வேட்டை...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை கே.கே.நகரில் உள்ள மளிகைக்கடைக்காரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருபத்தியொன்று நாட்கள் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு வரும் ஏப்ரல் 14-ம் தேதியோடு நிறைவடைகிறது. ஆனாலும் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராததால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே வரலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் அத்தியாவசிய கடைகளான மளிகைக்கடை, காய்கறி கடை, இறைச்சிக்கடை, பெட்ரோல் நிலையம் ஆகியவை இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அவைகள் இயங்குவதற்கான நேரம் காலை 6 மணிமுதல் மதியம் 1 மணிவரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடைகளில் பொருட்கள் வாங்குபவர்கள் கண்டிப்பாக சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை கே.கே.நகரில் மளிகைக்கடை நடத்துபவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் மளிகைக்கடையையும், அவர் வசித்து வந்த வீடு மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தையும் சுகாதாரத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. மேலும் அவரின் மளிகைக்கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிய அந்த பகுதியை சேர்ந்த மக்களை கண்டறியும் முயற்சியில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.