'வேண்டுகோள் வைத்த முன்னாள் கைதி'... நெகிழவைத்த 'கலெக்டர்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | May 27, 2019 04:35 PM
சுமார் 17 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவர், மாவட்ட ஆட்சியரின் உதவியால் புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் மேலவள்ளமடம் பகுதியை சேர்ந்தவர் வேதமணி. 57 வயதான இவர் ஆயுள் தண்டனை பெற்று 17 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். தற்போது அவ்வழக்கில் சிறையிலிருந்து விடுதலையாகி இருக்கிறார். இதனையடுத்து ஏதாவது புதிய தொழில் செய்யவேண்டும் என நினைத்த வேதமணிக்கு கையில் பணம் ஏதும் இல்லை.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் வேதமணி கலந்து கொண்டார். அப்போது புதிதாக வேலை தொடங்க கடனுதவி வழங்கி உதவ வேண்டும் என வேதமணி, ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார். அதன்பின்னர், புதிய தொழில்முனைவோர் திட்டம் அல்லது பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் லோனுக்கு விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் வேதமணிக்கு அறிவுறுத்தினார்.
இதனையடுத்து வேதமணியும் லோனுக்கு விண்ணப்பித்தார். ஆனால் அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் ஆட்சியர் அலுவலகத்திற்கே வந்தார் வேதமணி. தன்னுடைய சிறைவாசம் உள்ளிட்ட காரணங்களால் லோன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை ஆட்சியரிடம் கூறியிருக்கிறார் வேதமணி. உடனடியாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வேதமணியின் நிலை குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க உதவி ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.
உதவி ஆட்சியர் விசாரணை நடத்தி, முதுமை மற்றும் உடல் பலவீனம் காரணமாக வேதமணி எந்தவொரு உடல் உழைப்புடன் கூடிய வேலை செய்ய முடியாதவர். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும் இல்லாதவர். அவர் சிறைவாசியாக ஆவதற்கு முன்பு எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்துள்ளார் என அறிக்கை சமர்ப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தன் சுயவிருப்ப நிதியிலிருந்து 1 லட்சம் ஒதுக்கி வேதமணிக்கு உதவினார். இதன்மூலம் வேதமணி தொடங்கிய எலக்ட்ரிக்கல் கடையானது கடந்த 16-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அத்துடன் வேதமணியின் கடைக்கு ரேக் மற்றும் நாற்காலிகளும் இலவசமாக வழங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியின் மனிதநேய அனுகுமுறையால் ஒரு முன்னாள் சிறைவாசியின் நிகழ்கால வாழ்க்கை அமைதியாகவும். ஆத்மார்த்தமாகவும் நகரும் என்பதோடு, ஆட்சியர் சந்தீப் நந்தூரியின் இந்த மனிதாபிமான செயல் அனைவராலும் பெரும் பாராட்டையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.