5 ஸ்டார் ஹோட்டல்ஸ், PUB-ல்... கிறிஸ்துமஸ், நியூ இயர் பார்ட்டியா... இந்தப் பாடலை எல்லாம் ப்ளே பண்ண... பிரபல நிறுவனம் அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Dec 23, 2019 07:36 PM
கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களில், பிரபல பாடல்களை எல்லாம் ஒலிபரப்ப, பிபிஎல் (PPL) என்ற நிறுவனத்தின் அனுமதி பெற்று இருக்க வேண்டும் என்று சென்னை மற்றும் பம்பாய் உயர்நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளன.
காப்புரிமை சட்டம் (Copy Rights) 1957-ன் படி, பொது நிகழ்ச்சிகளில், ஒரு பாடலை பாடுவதற்கு அல்லது இசைப்பதற்கு முன்பு, அந்த இசையின் காப்புரிமை பெற்றவர்களிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும் என்பது சட்டம். ஆனால் ஒவ்வொரு இசை நிறுவனங்களையும், தனித்தனியாக அணுகுவதற்குப் பதிலாக, இதனை எளிதாகப் பெறுவதற்காக, பிபிஎல் (PPL - Phonographic Performance Limited) என்ற நிறுவனம் இந்தியாவில் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனம், 340 பிரபல இசை நிறுவனங்களுடன் சேர்ந்து, 30 லட்சத்துக்கும் அதிகமான இங்கிலீஷ், இந்தி, தமிழ் உள்ளிட்ட பாடல்களை பொதுநிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்களில் ஒலிபரப்பவும், பாடுவதற்கான உரிமையையும் பெற்றுள்ளது. குறிப்பாக சரிகமா, சோனி, டைம்ஸ் மியூசிக், டி சீரிஸ் போன்ற பிரபல நிறுவனங்களின் பிரநிதியாக (Representative) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, பிபிஎல் நிறுவனம், பொதுநிகழ்ச்சிகளில் சினிமா பாடல்கள் மற்றும் சினிமா அல்லாத பாடல்களை ஒலிபரப்புவதற்கு தேவையான உரிமையையும், அதற்கான தொகையை வசூல் செய்யும் உரிமையையும் பெற்றுள்ளது.
இதனால், நாளைக்குள் (24.12.2019) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஹோட்டல்கள், பார்கள், கஃபேக்கள், ரிசார்ட்டுகள் ஆகியவை கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற கொண்டாட்டங்களில், பாடல்களை ஒலிபரப்ப பிபிஎல் நிறுவனத்திடமிருந்து அனுமதி பெற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அப்படி அனுமதி பெறாமல் பாடல்களை ஒலிபரப்பினால், காப்புரிமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிபிஎல் நிறுவனம் கடுமையாக எச்சரித்துள்ளது.