உலக அளவில் 'பிபிசி'-யின்... 'சிறந்த 100 பெண்கள்' பட்டியலில் இடம்பிடித்த 'வட சென்னை' பெண்!.. யார் இந்த இசைவாணி?
முகப்பு > செய்திகள் > தமிழகம்'பிபிசி'-யின் '2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண்கள்' பட்டியலில் இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்' குழுவைச் சேர்ந்த கானா பாடகர் இசைவாணி இடம்பிடித்திருப்பது பாராட்டுகளைக் குவித்துள்ளது.

அரசியல்வாதிகளால் எப்போதும் புறக்கணிக்கப்படும் பகுதியான வடசென்னையை சேர்ந்த இசைவாணி, பிபிசி செய்தி நிறுவனத்தின் சிறந்த பெண்கள் பட்டியலில் இடம்பிடித்து தமிழகத்திற்கே பெருமை சேர்த்துள்ளார்.
ப்ளஸ் டூ-வோடு படிப்பை நிறுத்திய இசைவாணி, இன்று பிபிசியின் சிறந்த பெண்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள நிகழ்வு, திரையுலகை உற்றுநோக்க வைத்திருக்கிறது.
சமூகத்திற்கு மகத்தான பங்களிப்பை வழங்கும் பெண்களை கெளரவிக்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் பிபிசி சிறந்த பெண்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
இந்த வருடம் இடம் பிடித்த 100 பெண்களில் 4 பேர் இந்திய பெண்கள். அதில், இசைவாணி ஒரே தமிழகப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் அறிவாற்றல், படைப்பாற்றல், தலைமைத்துவம், அடையாளம் ஆகிய பிரிவுகளில், படைப்பாற்றல் பிரிவில் இடம்பிடித்த 21 பெண்களில் இசைவாணி மட்டுமே இந்தியர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குநர் பா.ரஞ்சித் நீலம் பண்பாட்டு மையத்தின் மூலம் 'தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்' இசைக்குழுவை ஆரம்பித்தார். அக்குழுவில் இடம்பிடித்த 20 ஆண் பாடகர்களில் இடம்பிடித்த ஒரே பெண் கானா பாடகர் இசைவாணி மட்டும்தான்.
அடுக்கு மொழியைக் கொண்ட கானா பாடல்கள் என்றாலே ஆண்களுக்கு மட்டும்தான் எழுத வரும்; பாட வரும்; சிந்திக்க வரும் போன்ற பிம்பங்களை பெண்களுக்கும் வரும் என்பதை நிரூபித்தவர் இசைவாணி.
எந்த மேடையில் தோன்றினாலும் அடுத்த நொடியே டைமிங், ரைமிங்கோடு கானா பாடல்களைப் பாடி ஆச்சர்யப்படுத்தி விடுவார்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நடுவராக பங்குபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இசைவாணி நாடோடிகள் 2, ஜெயில், அசால்ட்டு உள்ளிட்ட படங்களிலும் பாடல்களை பாடியுள்ளார். தனது குரலை பாடல்களோடு நிறுத்திக்கொள்ளவில்லை. சாதிய ஆதிக்கத்திற்கெதிராகவும் உரக்க பதிவு செய்து வருகிறார் இசைவாணி.
தற்போது பிபிசி பெண்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளதால், இசைவாணியை அறிமுகப்படுத்திய இயக்குநர் பா.ரஞ்சித் நெகிழ்ச்சியுடன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
