"என்ன 'டீம்'ல எடுக்கக் கூடாதுன்னு எந்த 'சட்டத்துல' சொல்லியிருக்காங்க??.. 'இந்திய' தேர்வாளர்களை கடுமையாக சாடிய 'இந்திய' வீரர்!!.. 'காரணம்' என்ன??..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் மூலம் பிரபலமான ஷெல்டன் ஜாக்சன் (Sheldon Jackson), கடந்த இரண்டு ரஞ்சி டிராபி தொடரில், சவுராஷ்டிரா அணிக்காக ஆடியிருந்தார்.

இந்த இரண்டு தொடர்களிலும், தலா 800 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தியிருந்தார் ஷெல்டன் ஜாக்சன். மேலும், கடந்த 2020 ஆம் ஆண்டு, சவுராஷ்டிரா அணி, ரஞ்சி கோப்பையை முதல் முறையாக வென்று சாதனை புரிந்திருந்தது. இதனைத் தொடர்ந்து, சவுராஷ்டிரா அணியில் இருந்து விலகி, தற்போது பாண்டிச்சேரி அணிக்காக ஷெல்டன் ஜாக்சன் ஆடி வருகிறார்.
பல ஆண்டுகளாக, உள்ளூர் போட்டிகளில் மிகச் சிறப்பாக ஜாக்சன் ஆடிய போதும், சர்வதேச அணியில் அவருக்கு இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை. அது மட்டுமில்லாமல், இந்தியா ஏ அணியில் கூட அவருக்கு வாய்ப்பு கிடைத்ததில்லை. ஜாக்சனுக்கு தற்போது 34 வயதாகும் நிலையில், வயதைக் கருத்தில் கொண்டு தான், அவரை புறக்கணிப்பதாகவும் ஒருபுறம் தகவல் உள்ளது.
இந்நிலையில், நியூஸ் 18 யிடம் பேசிய ஷெல்டன் ஜாக்சன், தேர்வாளர்களின் தேர்வு முறை பற்றி, சில விமர்சனங்களை முன் வைத்துள்ளார். 'எனக்கு இப்போது 34 வயதாகிறது. 22 - 23 வயதுடைய வீரர்களை விட சிறப்பாக ஆடினாலும், நான் விளையாடுவதற்கு தகுதியற்றவர் என கிரிக்கெட்டின் சட்டங்களில் எங்காவது எழுதப்பட்டுள்ளதா?. அப்படி உங்களை வயதின் அடிப்படையில், மதிப்பிடுபவர்கள் யார்?. அப்படியானால், அவர்கள் உங்களை எந்த அடிப்படையில் மதிப்பிடுகிறார்கள். ரஞ்சி தொடரில் சிறப்பாக ஆடியதன் மூலமா? அல்லது ஃபிட்னஸ் மூலமா?.
தொடர்ச்சியாக, 2 - 3 சீசன்களில், நீங்கள் 800 - 900 ரன்கள் வரை அடிக்கிறீர்கள் என்றால், நீங்கள் ஃபிட்டாக இருக்கிறீர்கள் என்று தானே அர்த்தம். அப்படி இல்லை என்றால், உங்களால் நிலை நிறுத்திக் கொண்டு அவ்வளவு ரன்களை அடிக்க முடியாது. எனவே, உங்களது ஆட்டத் திறனை எதனை வைத்து தீர்மானிக்க முடியும்?. "அவருக்கு 30 வயதுக்கு மேலாகி விட்டது" என பலர் என்னைப் பற்றி சொல்வதை நானே கேள்விப்பட்டுள்ளேன்.
அப்படி 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால், உங்களை அணியில் தேர்வு செய்யக் கூடாது என எங்காவது கூறப்பட்டுள்ளதா?. இந்த மாதிரியான கருத்துக்களை வெளிப்படுத்தி, உங்களுக்கான உரிமைகளை உங்களிடம் இருந்து பறிப்பது யார்?' என இதுவரை தனக்கு ஒரு சிறந்த வாய்ப்பு கிடைக்காத ஆதங்கத்தில், தேர்வாளர்கள் மீது ஷெல்டன் ஜாக்சன் விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
ஷெல்டன் ஜாக்சன் சொன்னது போலவே, இந்திய அணியில், ஒருவரின் ஆட்டத்தை வைத்து ஒருவரை தேர்வு செய்யாமல், வயதின் அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்வது வழக்கமாக உள்ளது.
சமீபத்தில் கூட, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உன்த்கட், உள்ளூர் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்த போதும், அவருக்கு வயது, 30 க்கு மேல் ஆவதால் தான், சர்வதேச போட்டிகளில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என இந்திய அணியின் தேர்வாளர் ஒருவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
