“கோலி இந்த ஐபிஎல் சீசன்ல 600 ரன்னுக்கு மேல அடிப்பார்”.. முன்னாள் RCB ஸ்டார் ஆருடம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடப்பு ஐபிஎல் தொடரில் 600 ரன்களுக்கு மேல் விராட் கோலி அடிப்பார் என எதிர்பார்ப்பதாக முன்னாள் ஆர்சிபி வீரர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. நேற்று மும்பை மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கும் இடையேயான லீக் போட்டி நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 18.5 ஓவர்களில் 128 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. முன்னதாக நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 205 ரன்கள் அடித்தும் பெங்களூரு அணி வெற்றி வாய்ப்பை தவற விட்டது.
இந்த நிலையில் பெங்களூரு அணியின் முன்னாள் வீரரான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஏபி டிவில்லியர்ஸ், விராட் கோலி குறித்து பேசியுள்ளார். அதில், ‘பெங்களூரு அணிக்காக டு பிளசிஸ் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளதை அனைவரும் அறிவோம். தற்போது கேப்டன் பதவி இல்லாததால் எந்தவித அழுத்தமும் இல்லாமல் சுதந்திரமாக விராட் கோலியால் விளையாட முடியும். அதனால் இந்த ஐபிஎல் சீசனில் அவர் 600 ரன்களுக்கு மேல் அடிப்பார் என எதிர்பார்க்கிறேன்’ என ஏபி டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடருடன் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகினார். இதனை அடுத்து நடந்த மெகா ஐபிஎல் ஏலத்தில் தென் ஆப்பிரிக்கா வீரர் டு பிளசிஸை பெங்களூரு அணி வாங்கியது. இதனைத் தொடர்ந்து அவர் பெங்களூரு அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டு பிளசிஸ், கடந்த ஐபிஎல் சீசன் வரை சிஎஸ்கே அணிக்காக நீண்ட ஆண்டுகள் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.