ஓய்வை 'அறிவித்து' 8 மாதங்களுக்கு பின்... அணிக்கு திரும்ப 'ஆசைப்படும்' அதிரடி வீரர்... உலகக்கோப்பை கனவு பலிக்குமா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Jan 15, 2020 01:04 AM
கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு அறிவிப்பது என்பது சர்வசாதாரண நிகழ்வாகி விட்டது. தோனி போன்ற சில வீரர்கள் கடைசிவரை ஓய்வே அறிவிக்க கூடாது என்று ஆசைப்படும் ரசிகர்களும் உண்டு. அந்தவகையில் தென் ஆப்பிரிக்க நாட்டின் அதிரடி வீரர், 360 டிகிரி வீரர் என புகழப்படும் ஏபி டிவில்லியர்ஸ் கடந்த ஆண்டு மே மாதம் தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்தார்.

உலகக்கோப்பை நெருங்கிய சமயத்தில் அவர் ஓய்வு முடிவை அறிவித்தது பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது. பின்னர் மீண்டும் அவர் அணிக்கு திரும்பி, உலகக்கோப்பையில் ஆட ஆசைப்பட்டதாகவும், ஆனால் அணி நிர்வாகம் அதனை ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது.
இந்தநிலையில் டி20 உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்க அணி சார்பாக ஆட ஆசைப்படுவதாக டிவில்லியர்ஸ் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாட மிகவும் விருப்பமாக உள்ளது. இதற்காக அணியின் பயிற்சியாளர் பவுச்சருடனும், அணியின் இயக்குநர் கிரீம் ஸ்மித் மற்றும் கேப்டன் டூ பிளசிஸ் ஆகியோருடன் பேசியிருக்கிறேன்.
நாங்கள் அனைவரும் இதை சாத்தியமாக்கவே விரும்புகிறோம். இதற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டியதுள்ளது. எனினும் உறுதியாக எதையும் கூற முடியாது. இந்தாண்டின் கடைசியில் என்ன நடக்கவிருக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்,'' என தெரிவித்து இருக்கிறார்.
