களத்தில் பாயும் 'ரசிகர்கள்'.. 'தல'யைத் தொடர்ந்து விராத்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Apr 15, 2019 11:43 AM
விராத் கோலியை அருகில் பார்க்க கிரிக்கெட் ரசிகர் ஒருவர் பாதுகாப்பை மீறி மைதானத்துக்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஐ.பி.எல். 28-வது லீக் போட்டி மொஹாலியில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. இதில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியில், டி வில்லியர்ஸ், கேப்டன் கோலியுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினார். கோலி அரைசதம் கடந்து 67 ரன்னில் அவுட்டானார். டி வில்லியர்ஸ் 38 பந்துகளில் 59 ரன்கள் விளாசினார்.
இறுதியில், 19.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து பெங்களூரு அணி வெற்றி இலக்கை எட்டியது. 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணிக்கு, இந்த ஐ.பி.எல்.லில் இதுவே முதல் வெற்றி.
பெங்களூரு அணி பேட்டிங் செய்தபோது, பாதுகாப்பை மீறி ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் நுழைந்தார். பின்னர், அங்கு பேட்டிங் செய்துக்கொண்டிருந்த கேப்டன் விராத் கோலியைக் கட்டியணைத்தார். உடனே பாதுகாப்பு அதிகாரிகள் அந்த ரசிகரை மைதானத்துக்கு வெளியே அழைத்துச்சென்றனர். இதனால், மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தல தோனியைத் தொடர்ந்து விராத் கோலியை அருகில் பார்க்க, கிரிக்கெட் ரசிகர்கள் பாதுகாப்பை மீறி ஆர்வத்துடன் மைதானத்துக்குள் நுழைந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
