U 19 உலக கோப்பை : தினமும் 50 கி.மீ பயணம்.. வேலையிழந்த தந்தை.. தடைகள் கடந்து சாதித்த ஷேக் ரஷீத்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுU 19 உலக கோப்பையின் இறுதி போட்டியில், இங்கிலாந்து அணியை வீழ்த்தி, நான்கு விக்கெட்டுகள் வித்தியாசட்டத்தில், வெற்றி பெற்ற இந்திய அணி, 5 ஆவது முறையாக U 19 கோப்பையை கைப்பற்றி சாதனை புரிந்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 189 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ராஜ் பாவா 5 விக்கெட்டுகளும், ரவி குமார் 4 விக்கெட்டுகளை எடுத்தனர்.
தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, சற்று தடுமாற்றம் கண்டாலும், ஷேக் ரஷீத் மற்றும் நிஷாந்த் சிந்து ஆகியோரின் உதவியுடன், 48 ஆவது ஓவரில் இலக்கை எட்டி, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று வரலாறு படைத்தது.
U 19 இந்திய அணி சாதனை
இதற்கு முன்பு, முகமது கைஃப், விராட் கோலி, உன்முகுந்த் சந்த் மற்றும் பிரித்வி ஷா ஆகியோரின் தலைமையில், U 19 உலக கோப்பையை வென்றுள்ள இந்திய அணி, தற்போது யாஷ் துல் தலைமையில் ஐந்தாவது முறையாக வென்று அசத்தியுள்ளது. அது மட்டுமில்லாமல், அதிக முறை U 19 கோப்பையை வென்ற அணி என்ற பெருமையும், இந்திய அணி வசம் தான் உள்ளது.
வெற்றி பெற்ற அசத்திக் கட்டிய இளம் இந்திய வீரர்களுக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டி வரும் நிலையில், ஒவ்வொரு வீரருக்கும் தலா 40 லட்சம் ரூபாய் பரிசு தொகையையும் பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஷேக் ரஷீத்
இதனிடையே, இந்திய அணியில் இடம் பிடித்திருந்த வீரர் ஒருவரது உருக்கமான பின்னணியும் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. U 19 இந்திய அணியின் துணை கேப்டனான ஷேக் ரஷீத், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரை இறுதி போட்டியில், கேப்டன் யாஷ் துல்லுடன் இணைந்து, சிறப்பான பார்ட்னர்ஷிப் ஒன்றை உருவாக்கியிருந்தார்.
சிறப்பான ஆட்டம்
யாஷ் துல் 110 ரன்களும், ஷேவாக் ரஷீத் 94 ரன்களும் எடுக்க, இந்திய அணி சிறப்பான ஸ்கோரை எட்டி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, இறுதி போட்டிக்கும் முன்னேறியிருந்தது. இறுதி போட்டியிலும், இந்திய அணியின் தொடக்க விக்கெட்டுகள் அடுத்தடுத்து வெளியேற, நிதானமாக ஆடிய ஷேக் ரஷீத், 50 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.
தந்தை ஷேக் பாலிஷா
இன்று இந்திய அணி, கோப்பையை வெல்ல உதவிய ஷேக் ரஷீத், இந்த இடத்தில் வந்து சேர்வதற்கு பல தடைகளைக் கடந்து வந்து தான் சாதித்துள்ளார். ஆந்திர மாநிலம், குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் பாலிஷா. இவரது மகன் தான் ஷேக் ரஷீத். குண்டூர் பகுதியில் இருந்து, சுமார் 50 கி.மீ தொலைவில் இருக்கும், மங்களகிரி கிரிக்கெட் அகாடமிக்கு தினமும் தனது மகனை அழைத்துக் கொண்டு பயணம் செய்துள்ளார் பாலிஷா.
தினமும் 3 மணி நேர பயணம்
முன்னதாக, சிறு வயது முதல் ரஷீத்திடம், கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஆர்வம் இருந்துள்ளது. இதனை நேரில் கண்ட பாலிஷாவின் நண்பர்கள் சிலர், மகனை கிரிக்கெட் அகாடமியில் சேர்த்து விடச் சொல்லி அறிவுறுத்தியுள்ளனர். குண்டூர் பகுதிக்கு அருகே எந்த கிரிக்கெட் பயிற்சி மையமும் இல்லாததால், அங்கிருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் தான், மங்களகிரி கிரிக்கெட் அகாடமி இருந்துள்ளது.
தினமும் பயிற்சிக்கு செல்ல வேண்டும் என்ற நிலை இருக்க, அகாடமியோ அதிகம் தொலைவில் இருந்துள்ளது. இருந்தாலும், மனம் தளராத பாலிஷா, மகனுக்காக தினமும் 3 மணி நேரம் பயணம் செய்துள்ளார். இன்னொரு புறம், குடும்பத்தில் பாலிஷா மட்டும் தான் வேலை செய்து வந்துள்ளார்.
மகனின் கிரிக்கெட் கனவு
அவரது வருமானம் தான் குடும்பத்தின் ஆதாரமாக இருக்க, தினமும் மகனுக்காக அத்தனை தூரம் பயணமும் செய்து வந்தார். இதன் காரணமாக, வேலைக்கு தாமதமாக பாலிஷா சென்றதால், வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மகனின் கிரிக்கெட் கனவுக்காக, இரண்டு முறை வேலையையும் பாலிஷா இழந்துள்ளார்.
செலவை ஏற்றுக் கொண்ட பயிற்சியாளர்
குடும்ப வறுமை சூழல், வேலையின்மை என எந்த நிலை ஏற்பட்டாலும், மகனின் கிரிக்கெட் கனவுக்காக தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருந்தார் பாலிஷா. ஷேக் ரஷீத்தின் குடும்ப சூழ்நிலையைக் கண்ட பயிற்சியாளர், அவருக்கு உதவ முன் வந்துள்ளார். அதன்படி, ஷேவாக் ரஷீத்தின் முழு செலவையும், அவர் ஏற்றுக் கொண்ட நிலையில், அதன் பின், ஷேவாக் ரஷீத் தொட்டதெல்லாம் வெற்றியாக அமைந்துள்ளது.
U 19 அணியில் இடம்
2018 - 2019 ஆம் நடந்த விஜய் மெர்ச்சண்ட் தொடரில், 3 சதங்களுடன் 674 ரன்கள் எடுத்து அசத்தினார் ஷேக் ரஷீத். தொடர்ந்து, வினு மன்கட் டிராபி, சேலஞ்சர்ஸ் டிராபி மற்றும் வங்கதேச தொடர் ஆகியவற்றில் சிறப்பாக ஷேக் ரஷீத் ஜொலிக்கவே, U 19 உலக கோப்பையின் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது.
மகனின் வெற்றி
உலக கோப்பைத் தொடருக்கு முன்பாக, ரஷீதுக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டிருந்தது. இதானால், அவரது குடும்பத்தினர் அதிகம் வருந்தியுள்ளனர். தொடர்ந்து, அதிலிருந்து மீண்டு வந்த ஷேக் ரஷீத், இன்று, அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகளில், இந்திய அணி வெல்ல முக்கிய பங்காற்றியுள்ளார். மகனின் வெற்றியைக் கண்ட பாலிஷா, உற்சாகத்தின் உச்சிக்கே சென்றுள்ளார்.
மகனின் கனவை நிறைவேற்ற, தந்தையின் கடின உழைப்பும் முக்கிய பங்கு வகித்ததால், பாலிஷாவையும் பலர் பாராட்டி வருகின்றனர். இனி வரும் நாட்களில், சிறப்பாக ஆடி, சர்வதேச இந்திய அணியிலும் தேர்வாகி, பல சாதனைகளை புரிய வேண்டும் என பலரும், ஷேக் ரஷீத்தை வாழ்த்தி வருகின்றனர்.