'இந்திய' அணியில் இடம்பிடித்த 'மளிகை' கடைக்காரர் மகன்.. அசர வைக்கும் MOTIVATION 'ஸ்டோரி'..
முகப்பு > செய்திகள் > விளையாட்டு19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பைத் தொடர், வரும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி, வெஸ்ட் இண்டீஸில் வைத்து நடைபெறவுள்ளது.
இதற்காக, 17 வீரர்கள் அடங்கிய இந்திய அணி, சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து தேர்வான இளைஞர் சித்தார்த் யாதவின் பின்னணி, கிரிக்கெட் ரசிகர்கள் பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. அப்படி சித்தார்த் யாதவின் பின்னணி என்ன என்பது பற்றியும், அவர் கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன என்பது பற்றியும் காண்போம்.
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தை அடுத்து அமைந்துள்ளது கோட்கான் என்னும் சிறிய கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஷ்ரவன் யாதவ். இவர் அப்பகுதியில், சாதாரண மளிகைக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகன் தான் சித்தார்த் யாதவ். இவருக்கு சிறு வயதில் இருந்தே, கிரிக்கெட்டில் அதிக ஆர்வமும், ஆற்றலும் இருப்பதை தெரிந்து கொண்ட ஷ்ரவன், சித்தார்த்திற்கு 8 வயது ஆனதில் இருந்தே அவருக்கு பயிற்சிகளை அளிக்கத் தொடங்கியுள்ளார்.
கடையின் வியாபாரம் பாதிக்கப்பட்டால் கூட கவலையில்லை என தனது மகனுக்கு தினமும் 3 - 4 மணி நேரம் வரை பயிற்சியளித்துள்ளார் ஷ்ரவன். பயிற்சியின் போது, ஸ்ரவன் தான் சித்தார்த்திற்கு பந்து வீசுவார். அப்படி இல்லையெனில், மகனை பந்து வீசச் செய்து, தந்தை பேட்டிங் செய்வார். இதன் மூலம், பள்ளி, கல்லூரி, மாவட்டம் என படிப்படியாக கிரிக்கெட் போட்டியில் அசத்தி வந்தார் சித்தார்த். தொடர்ந்து, உத்தரப்பிரதேச மாநிலத்தின் 16 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் விளையாடி, ஒரு இரட்டை சதம் மற்றும் ஐந்து சதங்கள் அடித்து, மண்டல கிரிக்கெட் அகாடமிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், பெங்களூருவிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று பயிற்சி பெற்று வந்தவர், தற்போது, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை அணியிலும் இடம் பிடித்துள்ளார்.
தனது மளிகைக் கடை வியாபாரத்தையும் பொருட்படுத்தாமல், மகனை படிப்பில் அதிக கவனம் செலுத்துமாறு குடும்பத்தினர் அழுத்தம் கொடுத்த போது, கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல், மகனை எப்படியாவது கிரிக்கெட் வீரராக ஆக்கிவிட வேண்டும் என்பதில், தற்போது வெற்றியும் கொண்டுள்ளார் ஷ்ரவன்.
உலக கோப்பை போட்டிக்காக சித்தார்த்திற்கு கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் அதே வேளையில், அவரது தந்தையின் அர்பணிப்பிற்கும் லைக்குகளை வழங்கி வருகின்றனர்.