'ஐபிஎல் தொடரில்’... ‘சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்’... ‘சில அதிரடி மாற்றங்கள்’... ‘குஷியில் சென்னை ரசிகர்கள்’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பல வருடங்களாகப் பயன்பாட்டில் இல்லாத I, J மற்றும் K கேலரிகளை, மார்ச் மாதம் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்காக திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதல் ரசிகர்கள் மேட்சை நேரடியாக கண்டு களிக்கலாம்.
இந்தியாவின் பழமையான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், I, J மற்றும் K என 3 கேலரிகள், கடந்த 2012-ம் ஆண்டு முதல் பயன்படுத்தப்படாமல் இருந்து வந்தது. சுமார் 12,000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் கேலரிகளுக்கு இடையிலான இடைவெளி 8 மீட்டராக இருக்க வேண்டும். ஆனால், இடைவெளி 5.4 மீட்டர்களாக மட்டுமே உள்ளது. அதனால், அந்த கேலரிகளுக்கு CMDA அனுமதி வழங்கவில்லை. இந்தப் பிரச்னையால் அந்த 3 கேலரிகளிலும் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
இந்நிலையில் எம்சிசி கிளப் மற்றும் K கேலரி ஆகியவற்றின் இடையே இடைவெளியை அதிகரிக்க, மைதானத்தில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தை இடித்துத் தள்ள தி மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் முடிவு செய்துள்ளது. இதற்காக, சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்திடன் அனுமதி கோர முடிவு செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரியில் உடற்பயிற்சிக் கூடத்தை இடித்துவிட்டு, மார்ச் இறுதியில் தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டியின்போது மூன்று கேலரிகளையும் திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், ஐபிஎல் போட்டி முடிந்தபிறகு பெவிலியன் பகுதி இடிக்கப்பட்டு புதிய வடிவமைப்பில் கட்டடம் கட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுக்கு சொந்தமான சேப்பாக்கம் மைதானத்தின் குத்தகை காலம் அண்மையில் முடிந்தநிலையில், இதனை குத்தகைக்கு எடுத்து நிர்வகித்து வரும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவரான ரூபா குருநாத் கேட்டு கொண்டதை அடுத்து, மேலும் 21 ஆண்டுகளுக்கு குத்தகை காலத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்தே தற்போது இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.