‘2 தடவை அவருக்கு தப்பா அவுட் கொடுத்துட்டேன்’.. பல வருஷம் கழித்து ‘உண்மையை’ ஒப்புக்கொண்ட அம்பயர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசச்சினுக்கு தவறாக அவுட் கொடுத்தது உண்மைதான் என சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் முன்னாள் அம்பயர் ஸ்டீவ் பக்னர் தெரிவித்துள்ளார்.
![Steve Bucknor recalls handing Sachin Tendulkar wrong decisions Steve Bucknor recalls handing Sachin Tendulkar wrong decisions](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/steve-bucknor-recalls-handing-sachin-tendulkar-wrong-decisions.jpg)
கடந்த 2003ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக காபாவில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜேசன் கில்செஸ்பி வீசிய ஓவரில், அம்பயர் பக்னர் சச்சினுக்கு எல்பிடபிள்யூ முறையில் அவுட் கொடுத்தார். ஆனால் அது அவுட் இல்லை என்பது தொலைக்காட்சி ரீப்ளேவில் தெரியவந்தது. அதேபோல் கடந்த 2005ம் ஆண்டு ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் அப்துல் ரசாக் வீசிய பந்து சச்சினின் பேட்டில் படாமல் சென்றது. ஆனால் அம்பயர் பக்னர் தவறாக அவுட் கொடுத்தார். இவை எல்லாம் அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பக்னர் இந்த சம்பவங்கள் தொடர்பாக பகிர்ந்துகொண்டார். அதில் ‘சச்சினுக்கு இரண்டு தருணத்தில் நான் தவறாக அவுட் கொடுத்துவிட்டேன். எந்தவொரு அம்பயரும் தெரிந்தே தவறான முடிவு வழங்க விரும்புவதில்லை. ஆனால் மனிதர்கள் தவறு செய்வது சகஜம். ஒரு முறை ஆஸ்திரேலியாவில் பந்து விக்கெட்டுக்கு மேலே சென்றது. இரண்டாவது முறை ஈடன் கார்டனில், பந்து சச்சினின் பேட்டில் படவில்லை’ என பக்னர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பக்னர், ‘கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்யும் போது உங்களுக்கு ஒன்றுமே கேட்காது. ஏனென்றால் 1 லட்சம் ரசிகர்கள் கோஷமிடுவார்கள். தவறுகள் செய்வதும், தவறுகளை ஏற்றுக்கொள்வதுமே மனித வாழ்வின் ஒரு பகுதி. இது அம்பயரின் தன்னம்பிக்கையை பாதிக்குமா என தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக திறனை மேம்படுத்தும்’ என பக்னர் தெரிவித்தார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)