‘2011 WORLDCUP’ வெற்றி மேட்ச் பிக்சிங்கா?.. கொதித்த முன்னாள் கேப்டன்.. இலங்கை அரசு எடுத்த அதிரடி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி போட்டியில் சூதாட்டம் நடந்ததாக இலங்கை முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை இறுதிப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா கோப்பையை கைப்பற்றியது. கடந்த 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது. அதன்பின்னர் 28 ஆண்டுகள் கழித்து தோனி தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பையை வென்றது.
இந்த நிலையில் இந்த இறுதிப்போட்டியில் சூதாட்டம் (மேட்ச் பிக்சிங்) நடந்ததாக இலங்கை முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் அலுத்காமகே தற்போது குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து தெரிவித்த அவர், ‘2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நாங்கள் பணத்துக்காக கோப்பையை விற்று விட்டோம். அப்போது நான் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தேன். இந்த விவகாரத்தில் கிரிக்கெட் வீரர்களின் பெயரை உள்ளே இழுக்க விரும்பவில்லை’ என தெரிவித்து பரபரப்பை கிளப்பினார்.
அப்போட்டியில் இலங்கை அணியின் கேப்டனாக இருந்த சங்ககரா, ‘இறுதிப்போட்டியில் சூதாட்டம் நடந்திருந்தால் அதற்கான ஆதாரத்தை காட்டுங்கள்’ என்ன இலங்கை முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரை விமர்சனம் செய்தார். மேலும் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயவர்தனே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘இலங்கையில் தேர்தல் வர இருக்கிறது. அதற்காக இப்போதே சர்க்கஸை தொடங்கி விட்டார்கள். சூதாட்டத்தில் யார் ஈடுபட்டார்கள் என்பதற்கான ஆதாரங்களையும், பெயர் விவரங்களையும் அமைச்சர் வெளியிட வேண்டும்’ என ஜெயவர்தனே காட்டமாக பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் இலங்கை முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் அலஹப்பெருமா உத்தரவிட்டுள்ளார். இதற்காக விளையாட்டுத்துறை செயலாளர் ருவான்சந்த்ரா தலைமையிலான கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை தொடர்பான அறிக்கையை 2 வாரத்துக்கு ஒரு முறை சமர்பிக்க வேண்டும் என அமைச்சர் அலஹப்பெருமா உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.