'சின்ன தவறு தான?.. அதுக்கு இவ்ளோ பெரிய தண்டனையா'?.. சீனியர் வீரர்களை... அதிரடியாக நீக்கிய இலங்கை கிரிக்கெட் வாரியம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகவனக்குறைவாக செய்த தவறுக்காக இலங்கை வீரர்கள் 3 பேருக்கு மிகப்பெரும் தண்டனையை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விதித்துள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை அணி ஏற்கனவே இங்கிலாந்திடம் ஒயிட் வாஷ் ஆன நிலையில் தற்போது ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கை அணி தங்களது வீரர்களை பயோ பபுள் பாதுகாப்பில் வைத்துள்ளது. ஆனால், பபுள் விதிகளை மீறி குசல் மெண்டீஸ், டிக்வெல்லா, தனுஷ்கா குணதிலகா ஆகியோர் வெளியில் சுற்றித்திரிந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சாலையில் அமர்ந்திருந்த குஷல் மெண்டீஸ், மற்றும் நிரோசன் டிக்வெல்லா ஆகியோர் புகைப்பிடித்துக் கொண்டிருந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த இலங்கை கிரிக்கெட் வாரியம் அவர்கள் மூவரையும் சஸ்பெண்ட் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், குனதிலகா மற்றும் டிக்வெல்லா ஆகியோரை உடனடியாக இலங்கைக்கு திரும்பி வரவழைத்தது.
இந்நிலையில், அவர்கள் மூன்று பேருக்கும் ஒருவருட காலம் கிரிக்கெட் விளையாட தடைவிதித்து அதிரடி உத்தரவை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விதித்துள்ளது. மேலும், விசாரணையின் முடிவை பொறுத்து அபராதங்களும் விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. அதன்படி இவர்கள் மூவரும் அடுத்ததாக மீண்டும் ஜூன் 2022ம் ஆண்டு தான் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கப்படுவார்கள்.
தடைசெய்யப்பட்டுள்ள குசல் மெண்டீஸ், டிக்வெல்லா, தனுஷ்கா குணதிலகா ஆகியோர் மட்டுமே தற்போதுள்ள இலங்கை அணியில் அதிக அனுபவம் வாய்ந்த வீரர்களாக பார்க்கப்படுகின்றனர். இவர்களின் தடையால், டி20 உலகக்கோப்பையில் இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவு இருக்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
