“அந்த பையன் பிறப்பிலேயே கேப்டன்”.. இளம் வீரரை தாறுமாறாக புகழ்ந்த கொல்கத்தா அணியின் ஆலோசகர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் குறித்து அந்த அணியின் ஆலோசகர் புகழ்ந்து பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் 15-வது சீசன் நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளன.
இந்த ஆண்டு முதல் லக்னோ, குஜராத் என்ற 2 புதிய அணிகள் இணைந்துள்ளதால், அனைத்து அணியிலுள்ள வீரர்களும் கலைக்கப்பட்டு மெகா ஐபிஎல் ஏலம் நடைபெற்றது. இதில் டெல்லி அணியில் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயரை கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது. இதனை அடுத்து அவருக்கு கொல்கத்தா அணியின் கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் கொல்கத்தா அணியின் ஆலோசகர் டேவிட் ஹஸ்சி, ஸ்ரேயாஸ் ஐயர் குறித்து பேசியுள்ளார். அதில், ‘ஸ்ரேயாஸ் ஐயர் பிறப்பிலேயே உருவானவர் கேப்டன். மைதானத்தில் அவர் நடந்து கொள்ளும் விதம், வீரர்களுக்கு கொடுக்கும் மரியாதை அவரின் தலைமை பண்பை காட்டுகிறது. துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள பேட் கம்மின்ஸ் குறித்து நன்றாக தெரிந்து வைத்துள்ளார். இருவரும் கொல்கத்தா அணியை முன்னின்று சிறப்பாக வழிநடத்துவார்கள்.
இதற்கு முன்பு டெல்லி அணியை ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக வழி நடத்தியுள்ளார். அவரிடம் கிரிக்கெட் பற்றிய நுணுக்கங்களும், ஒரு போட்டியை எவ்வாறு விளையாட வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையும் உள்ளது. அதனால் அவரால் தன்னிச்சையாக செயல்பட முடியும். தலைமை பயிற்சியாளர் மெக்கல்லம் மற்றும் கொல்கத்தா அணி நிர்வாகம் எடுத்துள்ள இந்த முடிவு சரியானது’ என ஸ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக நியமித்தது குறித்து டேவிட் ஹஸ்சி கருத்து தெரிவித்துள்ளார்.